கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இரு பதிவுகள் தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
நீதிபதி மஞ்சுள திலகரத்ன, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கை விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
முறைப்பாடு பதிவு
இந்த பதிவுகள் பெப்ரவரி 21 அன்று போத்தல ஜயந்த மற்றும் சனத் பாலசூரிய எனும் பெயர்களில் உள்ள முகநூல் கணக்குகளில் பகிரப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து, மேல் நீதிமன்ற பதிவாளர் அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேலும், இதற்கு தேவையான உத்தரவுகளை வழங்குமாறு நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக உள்ள குற்றப்பத்திரிகைகள் சமீபத்தில் நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போத்தல ஜயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோர் இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.