பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பங்களா வீடுகள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை பாவிப்பதற்காக பொருத்தமான முறைமையை அறிமுகம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் 50 அரச சுற்றுலா மாளிகை மனைகள் கொழும்பு 07 மற்றும் கொழும்பு 05 ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு மேற்குறித்த மாளிகை மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகைகள்
அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் கொழும்பு, கண்டி, நுவரெலிய, மஹியங்கனை, அனுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டிய மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள் தவிர ஏனைய ஜனாதிபதி மாளிகைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதில்லை.
அதற்கு மேலதிகமாக பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ விடுதிகளாகப் பயன்படுத்தப்பட்ட கொழும்பு 02 இல் அமைந்துள்ள விசும்பாய தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிர்வாக அதிகாரத்தின் கீழுள்ளதுடன் பிரதமர் அலவலகத்தின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் நுவரெலியா பிரதமருக்கான உத்தியோகபூர்வ விடுதி உள்ளது.
சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனை
மேற்குறித்த அரச சொத்துக்களின் பராமரிப்புக்காக பெருமளவு நிதி செலவிடப்படுகின்ற போதிலும், குறித்த சொத்துக்கள் குறை பயன்பாட்டில் காணப்படுகின்றன.
எனவே மேற்குறித்த வளாகங்கள் மற்றும் வீடுகளை பொருளாதார ரீதியில் உற்பத்தித்திறனாக பயன்படுத்தக்கூடிய வகையில் பொருத்தமான முறைமையை முன்மொழிவதற்கான அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.