முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 20 கிலோ அரிசிக்கு மானியம் வழங்கியமையினாலேயே நாட்டில் சிவப்பு அரிசி தட்டுப்பாடு தோன்றியுள்ளதாக வர்த்தகர் டட்லி சிறிசேன(Dudley Sirisena) தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று(02.12.2024) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தற்போது நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினை ஜனவரி மாதம் முதலாம் திகதி பாற்சோறு சமைப்பதே ஆகும். இதற்காக முடிந்தளவு வெள்ளை அரிசியை நாட்டு மக்களுக்கு வழங்குமாறு அரிசி வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
சிவப்பு அரிசி தட்டுப்பாடு
புதுவருடம் அன்று பாற்சோறு சமைப்பது எமது நாட்டு மக்களுக்கே உரித்தான பாரம்பரிய பழக்கம் என்பதால் இந்த எதிர்ப்பார்ப்பை எப்படியாவது நிறைவேற்றுவேன்.
மேலும், சிவப்பு அரிசி தட்டுப்பாட்டிற்கு காரணம் ரணில் விக்ரமசிங்கவே ஆவார். அரிசியை கிலோ 190 ரூபாவுக்கு கொள்வனவு செய்து மானியம் மூலம் விநியோகிப்பதன் மூலமே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.