கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாண பணிகளை நிறைவு செய்ய துறைமுகங்கள, விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நிர்மாண பணி
அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாண பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
கோரிக்கை
இந்நிலையில் கடந்த வருடம், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக் கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெறுவதாக அறிவித்தது.
இதேவேளை கொழும்பு மேற்கு முனையத் திட்டத்துக்காக உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிப்பதாக அதானி குழுமம் அறிவித்திருந்தது.
மேலும், அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திற்கு, அந்த குழுமத்தின் கோரிக்கைக்கு அமைய 553 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.