எந்தவித பாகுபாடுமின்றி நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகினுடைய
வாய்ப்புகளுக்கு வழிகாட்டி, அவர்களது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன்
பயணிப்பதற்கான பின்னணியை உருவாக்கிக் கொடுப்பதே தற்போதைய அரசின் முதன்மை
நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்துக்கு நேற்று(18.06.2026) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பொழுது, நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இங்கிருக்கின்ற பிள்ளைகளையும்
ஆசிரியர்களையும் நேரடியாகச் சந்திக்கும்போதே, நாட்டின் கல்வியை உயர்
மட்டத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற எமது அரசின் உறுதிப்பாட்டை எப்படியாவது
நிறைவேற்ற வேண்டும் என்ற பெரும் ஊக்கம் எமக்குக் கிடைக்கின்றது.
பிள்ளைகளின் முகங்களில் மகிழ்ச்சி தவழும், அன்பு மற்றும் பாதுகாப்பு நிறைந்த சூழலைக் கொண்ட பாடசாலைகளையே நாம் உருவாக்க விரும்புகின்றோம்.
கல்வித் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம்
புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

இது வெறுமனே பாடத்திட்ட
அபிவிருத்தி மாத்திரமல்லாது, கல்வித் துறையின் மனிதவள அபிவிருத்தி,
உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் என, புதிய உலகுக்குத் தேவையான திறன்களைப்
பிள்ளைகளுக்கு வழங்கும் பரந்த அளவிலான ஒரு கூட்டுச் செயற்பாடாகும்.
எதிர்காலத்தில் கல்வி நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு டிஜிட்டல் மயமாக்கலுடன்
புதிய பாடங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அதேபோன்று, ஆசிரியர் பயிற்சிச் செயல்முறையை மிகவும் பலமான முறையில் சீரமைப்பதன் மூலம்,
மாணவர்களுக்குப் பயனுள்ள நவீன கல்வி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க
எத்தனித்துள்ளோம்.
ஒரு நாடு என்ற வகையில் எம்முன் பல சவால்கள் உள்ளன. நீண்ட காலமாக எமது நாட்டின்
பொருளாதாரம் எதிர்நோக்கியிருந்த கடுமையான பின்னடைவை நாம் இப்போதே
படிப்படியாகச் சீர்செய்து வருகின்றோம்.
உலகளாவிய ரீதியிலும், காலநிலை
ரீதியிலும் ஏற்படும் மாற்றங்கள் எமது நாட்டையும் பாதிக்கின்றன. ஆகையினால்,
நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே
இந்தச் சவால்களை முறியடிக்கக் கூடியதாக இருக்கும் என்றார்.
கண்காணிப்பு விஜயம்
பரிசளிப்பு விழாவைத் தொடர்ந்து, குருநாகல் புனித பெர்ணடெட் மாதிரி ஆரம்பப்
பாடசாலைக்கும் பிரதமர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.
அதன் பின்னர், மஹவ, ரிதிபெந்திஎல்ல பகுதியில் அமைந்துள்ள கஜநெக்கம மகா
வித்தியாலயத்துக்கும் விஜயம் செய்த பிரதமர், அங்குள்ள ஆசிரியர் குழாமினருடன்
சுமுகமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.

இதன்போது, அப்பகுதி மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காகப் பல்வேறு உட்கட்டமைப்புச் சிரமங்களுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செயற்படும் கிராமப்புற ஆசிரியர்களுக்குத் தனது கௌரவத்தையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, விவசாய மற்றும்
கால்நடைத் துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான அசோக குணசேன, கீதா ஹேரத், குருணாகல் பிரதேச சபை தலைவர் எம்.ஏ.
விமலசிறி, மஹவ பிரதேச சபை தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண பிரதம செயலாளர்
சந்தன வன்னிநாயக்க உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி
அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Source: https://tamilwin.com/article/harini-amarasuriya-on-future-educational-plans-1781855383

