புதிய இணைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதியும் இன்று (27) விசாரணையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன, இன்று காலை வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது தானும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி சுஜீவ நிஷங்கவும் அறிவித்துள்ளார்.
அதன்படி, வழக்குக்கு பொருத்தமான நீதிபதியை நியமிப்பதற்காக, மே 21 ஆம் திகதி கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன் அழைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஒருவர் அந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன (Manjula Thilakaratne) குறித்த வழக்கில் இருந்து விலகுவதாக இன்று (27) தெரிவித்துள்ளார்.
சனத் பாலசூரிய மற்றும் பொத்தல ஜயந்த ஆகிய இரு நபர்கள் முகநூலில் தன்னைப் பற்றி பதிவிட்ட கருத்துகளைத் தொடர்ந்து தான் இந்த முடிவை எடுத்ததாக மஞ்சுள திலகரத்ன திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கிரிஷ் திட்டம்
அதன்படி, வழக்கை விசாரிக்க பொருத்தமான நீதிபதியை நியமிப்பதற்காக அதனை கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திக்கே முன்னிலைக்கு அனுப்புவதாகவும் அவர் திறந்த நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதேவேளை சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் சமீபத்தில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.