ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) ஆதரித்த பெரும்பான்மையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை(sajith premadasa) பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஆளுநர் நவீன் திஸாநாயக்க(navin dissanayake) வெள்ளிக்கிழமை (27) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
ரணிலுக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்குப் பின்னர் பேசிய திஸாநாயக்க, இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமை தாங்கியதாக தெரவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய விரும்புகிறோம்
“நம்மில் பெரும்பாலானோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய விரும்புகிறோம். ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஐக்கிய மக்கள் சக்தியும் மிகவும் ஒத்தவை. யூ.என்.பி.யும் எஸ்.ஜே.பியும் கூட்டு சேர்ந்திருந்தால், தேசிய மக்கள் சக்தியை (என்.பி.பி.) விட அதிக வாக்குகளை நாங்கள் பெற்றிருப்போம்” என்று திஸாநாயக்க குறிப்பிட்டார்.
ரணில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் விரைவில் தம்மைச் சந்திப்பார்கள் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.
ரணிலின் நிலைப்பாடு
“விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவில்லை அல்லது தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய விரும்பவில்லை. இது அவர் சஜித்துக்கு ஆதரவளிப்பதைக் காட்டுகிறது.
எஸ்.ஜே.பி.யுடன் நாம் உடன்பாட்டை எட்ட வேண்டுமானால், சஜித்தை பிரதமர் வேட்பாளராக அங்கீகரிக்க வேண்டும்” என்று திஸாநாயக்க கூறினார்.
எனினும், விக்ரமசிங்கவை ஆதரித்த பெரும்பாலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) இணைந்துள்ளதாக கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.