இஸ்ரேலின் (Israel) உளவு அமைப்பான மொசாட் (Mossad) இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (08.01.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள இஸ்ரேல் நாட்டவரின் மதஸ்தலங்கள் மற்றும் கலாசார ஸ்தலங்களுக்கு காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியர்களின் மதஸ்தலங்கள்
இது தெரடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலத்தில் அமையப்பெற்ற அரசாங்கங்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுப்பதற்கு பதிலாக இஸ்ரேலுடன் உறவுகளை பேணிவந்தன.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் எமக்கு பின்னடைவுகளும் ஏற்பட்டன. பலஸ்தீனம்
தொடர்பில் சர்வதேச ரீதியாக எமக்கு இருந்த கௌரவத்துக்கும் கடந்த அரசாங்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தின.
இலங்கையின் பல பிரதேசங்களில் இஸ்ரேலியர்களின் மதஸ்தலங்கள் மற்றும் கலாசார மத்தியஸ்தலங்களை அமைத்து வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சு
இவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன், அவை கட்டப்பட்டும் வருகின்றன. மாத்தறை வெலிகம பகுதியில் இவ்வாறான கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ளது.
தெஹிவளை அல்விஸ் பகுதியிலும் இவ்வாறான கட்டிடமொன்று கட்டப்படுகிறது. கொழும்பு 07, சிற்றம்பலம் ஏ கார்டினர் வீதியிலும் பாரிய கட்டிடமொன்று கட்டப்படுகிறது.
இந்த கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களுக்கு 24 மணித்தியாலமும் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பின் கீழ் அமைக்கப்படும் கட்டிடங்கள் என்ன என்பது தொடர்பிலேயே எமக்கு பிரச்சினை உள்ளது.
இலங்கையில் யூதர்கள் இருந்தால் அவர்களுக்கு மதஸ்தலங்களை அமைக்க அனுமதிக்கலாம். ஆனால், அவ்வாறு எவரும் இல்லாத சூழலிலேயே இந்த கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.
மொசாட்
பலஸ்தீனத்துக்காக நாம் அனைவரும் வீதியில் இறங்கி போராடிய வரலாறு உள்ளது. இந்த கட்டிடங்களை தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக நாம் கருதுகிறோம்.
“மொசாட்” இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. வெலிகடையில் குறித்த கட்டிடம் முஸ்லிம் மக்கள்
வாழும் பகுதிலேயே அமைக்கப்பட்டுள்ளது.
விரைவாக இதுதொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும். இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பலர் எமது நாட்டுக்கு வருகின்றனர்.
ஆனால், அவர்கள் இராணுவ வீரர்களா என்பதை அடையாளம் காண்பது கடினம். மனரீதியான நிம்மதியை தேடி அவர்கள் இங்கு வருகின்றனர்.
ஆனால், பல நாடுகள் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகையை நிறுத்தியுள்ளன. மாலைதீவு, லத்தீன் அமெரிக்க நாடுகள், தென் ஆபிரிக்க நாடுகள் என பல நாடுகள் நிறுத்தியுள்ளன.
இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளால் ஐரோப்பிய பயணிகள் வருவதில்லை என்பதாலேயே நிறுத்தியுள்ளன. எதிர்காலத்தில் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் வருகை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் என்ன எடுக்கும் நடவடிக்கை .” என குறிப்பிட்டுள்ளார்.