அம்பறை (திகாமடுல்ல) மாவட்ட தேர்தல் முடிவுகளை மீள எண்ண வேண்டுமெனக் கோரி தேர்தல் ஆணைக்குழுவில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவானது புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா (A. L. M. Athaullah) தலைமையிலான தேசிய காங்கிரஸ் நிர்வாகிகளால் இன்றையதினம் (22.11.2024) தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள்
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என குறிப்பி்ட்டுள்ளனர்.
கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இம்மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டு உள்ளது.
மேலும், இது தொடர்பான விரிவான விளக்கங்களை மிக விரைவில் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர் சந்திப்பின் போது தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் ஏ. உதுமாலெப்பை, பொருளாளர் ஜே.எம். வஸீர், சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.