ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் விடுத்த அழைப்பின் பேரில், இலங்கை கிரிக்கெட் உருமாற்றக் குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பிறகு, நேற்று (29.04.2026) முதல் இந்தப் பொறுப்பை ஏற்க முடிவு செய்ததாக விக்கிரமரத்ன ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் பெருமையையும் திறமையையும் மீட்டெடுப்பதே குழுவின் ஒரே மற்றும் உண்மையான நோக்கம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
நேர்மையும் அனுபவமும்
நேர்மையும் அனுபவமும் வாய்ந்த ஒன்பது நபர்களைக் கொண்ட ஒரு குழுவை வழிநடத்துவது எனக்குப் பெருமை, என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

“கிரிக்கெட் மேன்மை, நிறுவன மேலாண்மை மற்றும் சட்ட நிபுணத்துவம் ஆகியவற்றின் கலவையாகத் திகழும் ரோஷன் மகாநாம, குமார் சங்கக்கார, துஷிர ரடெல்ல, சிதாத் வெட்டிமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாஃப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் தினல் பிலிப்ஸ் ஆகிய ஒன்பது பேர் கொண்ட குழு இடம்பெற்றுள்ளது.
குழுவின் சீர்திருத்த செயல்திட்டத்தின் இரண்டு முக்கிய தூண்கள் காணப்படுகிறது.
சிறந்த ஆளுகையை நிறுவுதல்:
மக்கள் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) விதிகளுடன் இணைந்த ஒரு புதிய அரசியலமைப்பைச் செயல்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்முறைப் பண்பை வளர்த்தல் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட்டின் ஆளுகைக் கட்டமைப்பில் முழுமையான சீர்திருத்தம் செய்தல்.
களத்தில் சிறந்து விளங்குதல்:
வீரர்கள் தொடர்ந்து சர்வதேசத் தரத்தில் செயல்படவும், இலங்கையின் உலகத் தரவரிசையை உயர்த்தவும் உதவும் வகையில், புதிய கட்டமைப்புகள், உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் ஊக்க வழிமுறைகள் மூலம் தேசிய அணிகளை வலுப்படுத்துதல்.
பாடசாலை கழக மட்டம் முதலே கிரிக்கெட்டுடன் ஆழமாகப் பிணைந்திருக்கும் ஒருவன் என்ற முறையில், இதை நான் ஒரு பாக்கியமாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
இதன்படி நாடு முழுவதுமுள்ள விளையாட்டு ஆர்வலர்களின் ஆதரவு மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுடன் நீடித்த பலன்களை வழங்கவுள்ளேன்” என எரான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Source: https://ibctamil.com/article/plan-to-revive-sri-lankan-cricket-1777530770

