தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றம் வடக்கு கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் என்றுமில்லாதவாறு அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தல் பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மீண்டுமொரு தேர்தல்
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”இலங்கை நாட்டு மக்களாகிய நாம் மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றோம்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இப்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றோம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டம் மற்றும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என இரண்டிலுமாகச் சேர்த்து குறித்தொதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 45 அரசியல் கட்சிகளும், 46 சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.
வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வருகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தலானது இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியாகிய தமிழர் தாயகப் பகுதியிலும் பலத்த எதிர்பார்ப்புக்கள் நிறைந்த தேர்தலாக அமைந்துள்ளது.
உரிமை மறுப்புக்கு இலக்கான சிறுபான்மை மக்களாகிய நாம் நமது அனைத்து உரிமைகளையும் பெறுவதற்குரிய ஆகக்கூடிய வழிமுறை அரசியல்தான். இந்த அரசியல் பிரதிநிதிகளாக போட்டியிடுகின்ற அனைவரும் இதன் கனதியை உணர்ந்தவர்களா என்பது கேள்விக்குறியே.
திருப்புமுனைகள் நிறைந்த காலகட்டம்
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலின்போது தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றம் வடக்கு கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேவேளையில் என்றுமில்லாதவாறு அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தல் பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதையும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் வாக்காளர்கள் தமது கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.
30 வருட அகிம்சைப் போராட்டமும், 30 வருட ஆயுதப்போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.
மாறிவரும் அரசியல்
இந்நிலையில்,
1. நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைககள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில், அவற்றை மட்டும் கருத்தில்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடிவந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.
2. தமிழ் மக்களாகிய நாம் நமது சுயநிர்ணய உரிமை உட்பட காலாகாலமாக நாம்
வலியுறுத்திவருகின்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை தொடர்ந்து முன்னகர்த்திச் செல்லக்கூடியவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.
3. உறவினர், ஊரவர். நண்பர் போன்ற வட்டங்களைக் கடந்து செயற்படக்கூடிய, தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய, இலஞ்ச ஊழலற்ற, செயற்திறன்வாய்ந்த, சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்திசைவுள்ள நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.
மாறிவரும் அரசியல், பொருளாதார, சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் தொடர்பான, சமகால அரசியல் தொடர்பான நமது பார்வையிலும் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
ஒளிமயமானதொரு எதிர்காலத்தை நமக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு தீர்மானமிக்க தேர்தலாக இது அமைவதற்கு நாம் எல்லோரும் நமது வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்துவோமாக. நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மிகுந்த பொறுப்புணர்வோடு செயற்படுவோமாக!” என குறிப்பிட்டுள்ளார்.