தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு வளர்வதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் மீதான
மக்களின் அதிருப்தியே காரணம் என
அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வுக்
கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மாகாணசபைத் தேர்தல் விவகாரம் சிங்கள அரசியலில் பேசு பொருளாகிய அளவிற்கு தமிழ்,
முஸ்லிம், மலையகப் பிரதேசங்களில் பேசுபொருளாகவில்லை. சிங்களக்
கட்சிக்காரர்களுக்கு இத் தேர்தல் அவர்களின் இருப்பு சார்ந்த பிரச்சினை. எங்கே
வழக்கில் மாட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் அவர்களின் நாட்கள்
நகர்கின்றன. கைதினை விட கைது செய்யப்படலாம் என்ற அச்சம் தான் அவர்களை வாட்டி
வதைக்கின்றது.
அதிகரித்துள்ள அச்சம்
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செல்வாக்கினை ஏதோ ஒரு வகையில்
வீழ்த்தும் வரை இந்த அச்சம் குறையப் போவதில்லை. ரணில் விக்ரமசிங்கவின்
கைதிற்குப் பின்னரே இவ் அச்சம் அதிகரித்துள்ளன. எந்த கனவான்களும் கைது
செய்யப்படலாம் என்ற நிலையை ரணில் கைது உருவாக்கியுள்ளது.
சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைவதை நீண்ட காலமாகவே நிராகரித்து
வந்தார். பலர் இதற்காக கடுமையாக முயற்சித்த போதும் அவை அனைத்தும் தோல்விலேயே
முடிந்தன.

தற்போது கைது செய்யப்படலாம் என்ற அச்சம் அவரை ஐக்கியத்தை நோக்கித்
தள்ளியுள்ளது. பொதுஜன முன்னணி இனவாத வாக்கினை தான் தனியாக திரட்ட வேண்டும்
என்பதற்காக ஐக்கியத்தை விரும்பாவிட்டாலும் ராஜபக்சாக்கள் கைது செய்யப்படலாம்
என்ற நிலை அவர்களையும் ஐக்கியத்தை நோக்கி எதிர்காலத்தில் தள்ளலாம்.
செவ்வந்தியின் கைதும் பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவர் பாதாள உலகக்
குழுக்களுடன் சம்பந்தப்பட்ட நிலையும், அவர்களது அச்சத்தை மேலும்
அதிகப்படுத்தியுள்ளது.
பொதுஜன முன்னணியின் இனவாத வாக்குகளை முன்னர்
ஜே.வி.பியும் பங்கு போட்டிருந்தது. தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில்
இருப்பதன் காரணமாகவும் தமிழ் மக்களின் ஆதரவை கணிசமானளவு பெற்றிருப்பதனாலும்
தனது பாரம்பரிய இனவாதக் கொள்கையை சற்று அடக்கி வாசிக்கின்றது. இதனால் இனவாத
வாக்குகள் திரட்சியாக தனக்கு மட்டுமே கிடைக்கும் என பொதுஜன முன்னணி
நம்புகின்றது.
தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இருபத்தைந்து லட்சம் வாக்குகள்
வரை இழந்திருந்தது.
அது கிட்டத்தட்ட பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் மூன்றிலொரு
வீதமாகும். கூட்டுறவுச்சங்கத் தேர்தலில் சிங்கள தேசத்தின் இதயப்பகுதியான கண்டி
மாவட்டத்தின் மூன்று கூட்டுறவுச்சங்களில் பூச்சிய இடங்களையே பெற்றிருந்தது.
நுவர, கலகெதர, பத்தேகம தெற்கு என்பவற்றிலேயே இப்பூச்சிய நிலையைப்
பெற்றிருக்கின்றது. அங்கு ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியீட்டியிருந்தது. கண்டி
மாவட்டம் மீளவும் பழைய ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிகளை நோக்கி நகர்கின்றது என்ற
சந்தேகத்தையும் இவ் வெற்றி ஏற்படுத்தியுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்
“இதயப்பகுதியில் ஒரு ஜனரஞ்சக அரசாங்கம் பிரபலமற்றதாக மாறும் போது சுவரில்
எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள்; தெளிவாகத் தெரியும்” என சிங்கள ஆய்வாளரான தயான்
ஜயதிலக இதனை வர்ணித்திருக்கின்றார்.
தங்களது செல்வாக்கு வீழ்ச்சியடைந்து செல்கின்றது என்ற அச்சத்தினாலோ என்னவோ
“நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு
வந்தால் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும்” என பொது நிர்வாகம் மற்றும்
மாகாண சபைகள் உள்;ராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்திருக்கின்றார்.

மற்றைய விவகாரங்களில் எல்லாம் பெரும்பான்மைத் தீர்மானம் இதற்கு மட்டும் தான்
அனைவரதும் தீர்மானம் என்ற முடிவுக்கு வந்ததற்கு காலம் கடத்துவது மட்டுமே
காரணமாக இருக்க முடியும். மாகாண சபைத் தேர்தலில் எப்படியாவது காலத்தைக்
கடத்துவது என்றே தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது போலத் தெரிகின்றது.
தேசிய மக்கள் சக்திக்குள்ள பிரதான கவலை மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில்
சர்வதேச, பிராந்திய அழுத்தங்களும் இருக்கின்றது என்பதே!
மலையக இ முஸ்லீம் அரசியல் சுயாதீனத்தன்மை கொண்டவையல்ல. சார்பு நிலைத்தன்மை
கொண்டவை.
சிங்கள அரசியலின் தட்பவெட்பத்திற்கேற்பவே அவை செயற்படும். பொதுவாக
சிங்கள எதிர்க்கட்சிகளின் தீர்மானங்களுக்கு பின்னே இழுபட்டுச் செல்வதற்குத்
தான் வாய்ப்புக்கள் அதிகம் எனலாம். மலையக, முஸ்லீம் கட்சிகள் சிங்கள
எதிர்க்கட்சிகளின் தயவு இல்லாமல் தேசிய மக்கள் சக்தியின் அலைக்கு முகம்
கொடுக்க முடியாது சிங்களப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு
வீழ்கின்ற அளவிற்கு தமிழ் முஸ்லீம், மலையகப் பகுதிகளில் வீழ்ச்சி ஏற்படவில்லை.
அங்கு தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு பெரியளவிற்கு மாறாமல் இருக்கின்றது
எனலாம்.
தமிழ்ப் பிரதேசங்களில் மாகாண சபைத் தேர்தல் விவகாரம் பெரியளவிற்கு இன்னமும்
சூடுபிடிக்கவில்லை.
சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட கைது என்ற அச்சம் தமிழ்
அரசியல்வாதிகளுக்கு ஏற்படவில்லை. இதனால் மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக
ஜனநாயகத்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் அக்கறை செலுத்தி வருகின்றதே தவிர
தமிழரசுக்கட்சியோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ பெரிய அக்கறையைக்
காட்டவில்லை. தமிழ்த் தேசியக் கட்சிகளின் கவலையேல்லாம் தமிழ்ப் பிரதேசங்களில்
தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு வளர்கின்றது என்பதே. இந்தக்
கவலையிருந்தாலும் கட்சி அரசியல் போட்டி காரணமாக இந்தக் கவலையைப் போக்கும்
செயற்பாட்டில் இறங்குவதற்கு அவர்கள் இன்னமும் தயாராகவில்லை.
தமிழ்ப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு வளர்வதற்கு பல
காரணங்கள் செயற்படுகின்றன. அதில் பிரதானமானது தமிழ்த்தேசியக்கட்சிகள் மீதான
மக்களின் அதிர்ப்தியே!
இந்த அதிர்ப்தியில் முதலிடம் வகிப்பது தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒருங்கிணைந்த
அரசியலுக்கு வரவில்லை என்பதே. இவ் ஒருங்கிணைவு அரசியலுக்குள்
தமிழ்த்தேசியக்கட்சிகள் வருமாக இருந்தால் கட்சிகளின் ஏனைய குறைபாடுகளை
சகித்துக் கொள்ள மக்கள் தயாராக உள்ளனர்.
சுகபோக அரசியல் முன்னெடுப்பு
அதிருப்திக்கான இரண்டாவது காரணம் தமிழ்த்தேசியக்கட்சிகள் பிரக்ஞை பூர்வ
அரசியலை முன்னெடுக்காமல் சுகபோக அரசியலை (ஜொலி அரசியல்) முன்னெடுப்பதாகும்.
தமிழ் மக்கள்; அர்ப்பணமிக்க ஆயுதப் போராட்டத்தைக்கண்டு வளர்ந்தவர்கள்.
பிரதானமாக விடுதலைப்புலிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும்
அவர்களின் கொள்கை உறுதி, விலைபோகாத தன்மை, அளவு கடந்த அர்ப்பணம் குறித்து
எவரும் கேள்வி கேட்பதில்லை. ஒரு கொள்கைக்காக அடிபட்டுச் சாகின்ற அர்ப்பணத்தை
எவ்வாறு கேள்விக்குள்ளாக்க முடியும் என்பதே பலரது பதிலாக உள்ளது. அர்ப்பணம்
மிக்க ஆயுதப் போராட்ட அரசியலை கண்டு வளர்ந்தவர்களுக்கு கட்சிகளின் அரசியல்
சகிக்க முடியாததாக உள்ளது.

இன்று ஜொலி அரசியல் டீல் அரசியலாகவும் வளரத்
தொடங்கியுள்ளது.
இந்த அதிர்ப்தி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்த வரை சற்றுக் குறைவு
எனலாம். அவர்களின் கொள்கை உறுதி, விலை போகாத தன்மை, அர்ப்பணம் என்பவற்றை
அவர்கள் மெச்சுகின்றார்கள். முன்பு ஒருங்கிணைவு அரசிலுக்கு வராமல் கட்சி
அரசியலை நடாத்துகின்றார்கள் என்ற அதிர்ப்தி மக்களிடம் இருந்தது. அண்மைக்காலமாக
ஒருங்கிணைவு அரசியலுக்கான முயற்சியை அவர்கள் செய்வதால் அது தொடர்பான அதிர்ப்தி
சற்று குறைவடைந்துள்ளது.
எனினும் நினைவு கூர்தலில் தனி ஆவர்த்தனம் பாடுதல்,
அமைச்சர் சந்திரசேகரரை அஞ்சலி செலுத்த விடாமல் தடுத்தமை, எதிர்மறையான
அணுகுமுறை என்பன அதிருப்தியை உருவாக்கியுள்ள.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக மாறாத அதிர்ப்தி அவர்களின்
அமைப்புத்துறை சார்ந்ததே! ஒரு வலுவான அரசியல் இயக்கத்தை இன்னமும் அவர்களினால்
கட்டியெழுப்ப முடியவில்லை. ஜனநாயக நிர்வாகத்தை கட்டியெழுப்பியிருக்க வேண்டும்
அல்லது இராணுவ நிர்வாகத்தைக் கட்டியெழுப்பியிருக்க வேண்டும்.
இரண்டும்
அவர்களிடம் இவ்லை. சாம்பார் நிர்வாகமே நடைமுறையில் உள்ளது. இந்தச் சாம்பார்
நிர்வாகம் காரணமாக கிராமங்களில் கட்டமைப்புக்களை அவர்களினால் உருவாக்க
முடியவில்லை. கட்சிக்காக விசுவாசமாக உழைத்தவர்கள் தொடர்ச்சியாக தங்களுடன்
வைத்திருக்க அவர்களால் முடியவில்லை. மக்களின் ஆதரவுத்தளத்தை வலுவாகப் பேண
முடியவில்லை. வடக்கு – கிழக்கு எங்கும் பரந்த அமைப்பாக வளர்க்க முடியவில்லை.
இன்று குடாநாட்டில் மட்டும் சுருங்கிப்போன அமைப்பாகவே அவ்வமைப்பு உள்ளது.
கொள்கை உறுதிப்பாட்டைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி 1965ம் ஆண்டு ஐக்கிய
தேசியக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தில் பங்கு தாரரானவுடன்
காலாவதியாகிப் போனது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை
உறுதிப்பாடு 1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றதுடன்
காலாவதியாகிப்போனது.
கொள்கை உறுதிப்பாடு உள்ளவற்றிடமே விலை போகாத தன்மையும், அளவு கடந்த
அர்ப்பணமும் இருப்பதால் அவையும் இத்தரப்புக்களிடம் காலாவதியாகிப்போகின எனினும்
தேசமாகத் திரளுதல் என்பது இத் தரப்புகளையும் உள்ளடக்கியிருப்பதால் இத்
தரப்புக்களையும் இணைத்து பயணிக்க வேண்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி மீதான கவர்ச்சி
இந்த அவசியத்தை முதலில்
உணர்ந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்தியவர்கள் விடுதலைப்புலிகளே! 2000 ம்
ஆண்டில் அனைவரையும் இணைத்து பயணிக்க அவர்கள் தயாரானர்கள்.
தமிழ்ப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சிக்கு இரண்டாவது காரணம்
அக்கட்சி மீதான கவர்ச்சியாகும். தேசிய மக்கள் சக்தி தவைர்களது எளிமை மக்களுடன்
அன்னியோனியமாக பழகும் ஆற்றல், ஊழலுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் எதிரான
அதன் உறுதியான செயற்பாடுகள் என்பன மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தேசிய
மக்கள் சக்தி வெறுமனே அரசியல் கட்சியாக இல்லாமல் ஒரு அரசியல் இயக்கமாக
இருப்பதும் இந்தக் கவர்ச்சியை சாதகமாக்கியுள்ளது. இந்தக்கவர்ச்சி அவர்களின்
பாரம்பரிய இனவாத முகத்தை மக்களிடம் மறைத்துள்ளது.

அடுத்தது தமிழ்ப் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளும் அபிவிருத்தி
முயற்சிகளாகும் அபிவிருத்தி அரசியல் என்பது தமிழ் மக்களின் அரசியல்
பொருளாதாரத்துடன் இணைந்தது என்ற விளக்கம் மக்களிடம் கிடையாது. அவர்கள்
தொட்டுணரக் கூடியவை எல்லாம் உண்மையென நம்புகின்றனர். தமிழ் மக்களின்
சுயநிர்ணய அதிகாரத்திடம் அபிவிருத்தி அரசியலை ஒப்படைக்க வேண்டும் என்பதே
மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும். அதற்காகவே நீண்ட போராட்டமும் இடம்
பெற்றது.
அதை விடுத்து மத்திய அரசு நேரடியாகவே அபிவிருத்தி முயற்சிகளை
மேற்கொண்டால் அவை அபிவிருத்தியல்ல ஆக்கிரமிப்புக்களே! மயிலிட்டித்துறைமுகம்
சிங்கள மீனவர்களுக்காக தமிழர் தாயகத்தில் உருவாக்கிய துறைமுகமாக மாறியுள்ளது.
வன்னி பல்கலைக்கழகம் சிங்கள மாணவர்களுக்காக தமிழர் தாயகத்தில் கட்டியெழுப்பிய
பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. மயிலிட்டித் துறைமுகத்தினால் ஒரு தமிழ் மீனவர்
கூட இன்னமும் பயன்பெறவில்லை. வன்னிப்பல்கலைக்கழக மாணவர் மன்றத்தில் உப தலைவர்
பதவி கூட தமிழ் மாணவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பண்பாட்டு மையங்களாக விளங்கும் பல்கலைக்கழகங்கள்
இத்தனைக்கும்
பல்கலைக்கழகங்கள் ஒரு பிரதேசத்தின் பண்பாட்டு மையங்களாக விளங்குபவை. வன்னிப்
பல்கலைக் கழகம் வன்னி மக்களின் பண்பாட்டு மையமாக விளங்குகின்றதா? யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்திலேயே இவ்விடயம் அருகப்பார்க்கின்றது. குறைந்த பட்சம்
அபிவிருத்திச் செயற்பாடுகளை நடைமுறையிலுள்ள மக்கள் நிறுவனங்களிடம் கையளிக்கக்
கூட அரசு தயாராகவில்லை .
தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி தமிழ்த் தேசிய அரசியலை
வேரோடு அழிக்கக் கூடியவை.
சென்ற பாராளுமன்றத் தேர்தலில் அதன் வெற்றி
ஜெனிவாவில் தமிழ்த்தரப்பினை பொறுப்புக்கூறைலை வெகுவாகப்
பலவீனப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் ஆணை தங்களுக்குக் கிடைத்துள்ளது என
தேசிய மக்கள் சக்தியினர் உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த
வளர்ச்சி தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கை, பொறுப்புக் கூறல் கோரிக்கை
அனைத்தையுமே பலவீனமடையச் செய்யும்.
தற்போது எழும் கேள்வி தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியைத் தடுக்க என்ன
செய்யலாம் என்பதே! இதற்கான முதல் தெரிவு ஒருங்கிணைந்த அரசியல் தான். இதன்
மூலம் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்ட வேண்டும்.
அரசியல் கட்சிகள் சிவில்
அமைப்புக்கள் அனைத்தும் இதில் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மக்களின் அனைத்து
விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் கையாளக் கூடிய தேசிய அரசியல் பேரியக்கம்
கட்டியெழுப்பப்படல் வேண்டும். கிராமங்கள் தோறும் அடித் தளக் கட்டுமானங்கள்
உருவாக்கப்படல் வேண்டும். எதிர்ப்பு அரசியலுடன் மட்டும் நின்று விடாது தேச
நிர்மாண அரசியலை கூட்டாக முன்னெடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் இனவாத
முகத்தை முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். அடையாளப் போராட்டங்களையல்லாது
மக்கள் பேரெழுசச்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும். அவை “பொத்துவில் முதல்
பொலிகண்டி வரை”அணையாவிளக்குப் போராட்டங்களை விட மெலானதாக இருக்க வேண்டும்
மொத்தத்தில் வெறும் கதையாடல் அல்ல! வினைத்திறன் மிக்க செயல்களே இன்று தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

