கடந்த 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் வகையில் மக்களை ஒன்று திரட்டிய 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, அவர்கள் தொடர்பான தகவல்களை புலனாய்வு அமைப்புகளினால், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அடையாளம் காணப்பட்டவர்களில் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அறிக்கைகள்
அதன்போது, மக்கள் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து பேருந்துகளால் கொண்டு வரப்பட்டதாகவும், அதற்கான செலவினத்தை மேற்கொண்டவர்களையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும், கோட்டை நீதிமன்றம் முன்பு கூடியிருந்த மக்களுக்கான உணவுப்பொருட்கள், எதிர்க்கட்சித் தலைவர்களால் விநியோகிக்கப்பட்டதாகவும் அதனையும் கண்காணித்து புலனாய்வாளர்கள் தங்களது அறிக்கைகளில் இணைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்கமைய, கோட்டை நீதவான் நேற்று (27) சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது
நீதிமன்றில் சமர்பிப்பு
இதன்படி, எதிர்ப்பு குழுக்களை அடையாளம் காண புலனாய்வு அறிக்கைகள் மற்றும் விசாரணைத் தகவல்களை ஒருங்கிணைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவினரால் சேகரிக்கப்பட்ட காணொளிகள், புகைப்பட காட்சிகள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் முன்கூட்டியே வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் விசாரணைக்காக பயன்படுத்தப்பட உள்ளன.
அதற்கான முழுமையான, திருத்தமில்லாத காட்சிகள் ஊடக நிறுவனங்களிடமிருந்தும் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ்விசாரணை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எஸ்.பி. ஷானி அபேசேகரவின் நேரடி மேற்பார்வையில், உதவி காவல்துறை மேற்பார்வையாளர் தலைமையிலான குழுவால் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.