வாழைச்சேனை ஆழ்கடல் கடற்தொழிலாளர்களின் நீண்டகால பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபடும் படகுகளின் பாதுகாப்பு, மற்றும் அமைவிடம், பயணிக்கும் வேகம், உட்பட
சகல விபரங்களையும் துல்லியமாக தானியங்கி மூலம் வெளிப்படுத்தும் சிறப்பு
கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படாமையால் பல்வேறு சிரமங்களையும்
இழப்புக்களையும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
சிறப்பு கண்காணிப்பு
இவ்விடயம் தொடர்பிலும், வாழைச்சேனை பிராந்திய கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஏனைய
சவால்கள் தொடர்பிலும் மீனவ அமைப்பினால் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி
பிரபுவின் கவனத்திற்கு கொன்டு செல்லப்பட்டதையடுத்து அவரின் முயற்சியினால்
அப்பகுதிகடற்தொழிலாளர்களின் கோரிக்கையை கடற்றொழில் அமைச்சின் மூலம் நிவர்த்தி செய்து
கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான க.பிரபுவின் இந்த
முயற்சி காரணமாக கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் அதேவேளை இலங்கை
கடற்தொழிலாளர்கள் உரிய கடற்பரப்பை மீறி பயணிக்காமலும், சட்ட விதிகளை மீறாமலும்,
துறைசார் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஒழுங்கமைப்பில் மீன்பிடித்
தொழிலை கடற்தொழிலாளர்கள் முன்னெடுப்பார்கள் என கடற்தொழிலாளர் சங்கம் நம்பிக்கை
வெளியிட்டுள்ளது.
அவகாசம்
தம்மிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அமைச்சர் உட்பட அதிகாரிகளுக்கு
தெரியப்படுத்தி இரு தரப்பு கலந்துரையாடல் ஒன்றிணையும் ஒழுங்கு செய்த அதேவேளை, இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சி வெற்றி அடைந்துள்ளதாகவும்,
எதிர்வரும் ஆண்டு ஜூன்
மாத இறுதிக்குள் படகுகளுக்கு கண்காணிப்பு சாதனம்
பொருத்துவதற்கு அவகாசம் வழங்கப்படும்.

இதேவேளை, பாதுகாப்பு சாதனம் மற்றும்
பதிவு இன்றி உள்ள படகுகளுக்கும் சலுகை அடிப்படையில் குறைந்தது 75 சதவீத மானிய
வசதிகளை அமைச்சு மூலமாக ஏற்படுத்தி கொடுப்பதற்கான ஒழுங்குகளையும்
மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

