அடுத்த சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பதியை கொண்டு வருவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம் கூட செல்லாத நிலையில் அவர் நேற்றையதினம் பதவி விலகியுள்ளார்.
அவரின் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சையால் அவர் தாமாகவே முன்வந்து பதவி விலகியுள்ளார்.
சபாநாயகர் பதவி
சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் அவசியமில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலே போதும்.
இந்நிலையில், அவர் கல்வித்தகைமை அற்றவர் என்பது இன்னமும் உறுதியாகவில்லை எனினும், உரிய சான்றிதழ்களை முன்வைக்க முடியாத காரணத்தால் அவர் பதவி துறந்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், அடுத்த சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பதியை கொண்டுவருவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
செயலாளர் நாயகம்
ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்ற பின்னர் நிஹால் கலப்பதியை அப்பதவிக்கு கொண்டுவருவதே ஜே.வி.பியின் திட்டமாக இருந்ததாக கருதப்படுகிறது.
அதன் காரணமாகவே அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமல் இருந்திருக்க கூடும்.
மேலும் தென்மாகாண முதன்மை வேட்பாளராக அவரை களமிறக்கும் உத்தேசத்தை தேசிய மக்கள் சக்தி கொண்டிருந்த நிலையில், இறுதியில் அவர் தேசிய பட்டியல் உறுப்பினராக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான நிஹால் கலப்பதி அடுத்த சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.