Courtesy: H A Roshan
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடாத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (04) 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் பொது நிருவாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிச் சபைகள் பற்றிய கருத்துக்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பொது நிருவாக அமைச்சின் கீழ் நான் பிரதிநிதித்துவபடுத்தும் திருகோணமலை மாவட்டத்திற்கு 1083 மில்லியன் ரூபா மீண்டு வரும் செலவுக்காகவும் 168 மில்லியன் ரூபா மூலதன செலவுக்காகவும் மொத்தமாக 1251 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 275 மில்லியன் ரூபா குறைவானதாகும்.
ஒதுக்கப்பட்டுள்ள நிதி
மாவட்டத்தில் நிலவுகின்ற மேற்படி துறைசார் தேவைகளை கருத்திற் கொண்டு மாவட்டத்திற்கான மூலதன நிதி பன்மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த மாவட்டத்திலே பொது நிருவாக அமைச்சின் கீழ் இருக்க வேண்டிய அரசு பணியாளர் தொகை 1265 ஆகும். இருப்போரது எண்ணிக்கை 1134 ஆகும். 131 பணியாளர் பற்றாக்குறை காணப்படுகிறது.
இதில் 17 பதவி நிலை அதிகாரிகளும் அடங்குவர். இந்த அதிகாரிகள் இல்லாமல் நிருவாகத்தை நடத்துவது மிகவும் சிக்கலாக உள்ளது. எனவே மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அதேவேளை, மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடாத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.