முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரமும் தெற்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளும்


Courtesy: Parthiban Shanmuganathan

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஒகஸ்ட் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் தனது ஆரம்ப தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார்.

அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த பல்வேறு விவரங்களைக் குறிப்பிடும் செய்திகள் அடுத்தடுத்த நாட்களில் பல தமிழ் நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்டன.

ஆனால், ஓகஸ்ட் 19ஆம் திகதி அருண பத்திரிகையின் 8ஆம் பக்கத்தில் வெளியான ஒரு சிறு செய்தியைத் தவிர, தமிழ் ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியநேத்திரனின் தேர்தல் பிரசாரம் ஆரம்பமானது குறித்து வேறு எந்தச் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகையும் இது தொடர்பில் செய்தி வெளியிடவில்லை.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக மத்திய செயற்குழு கூட்டம் ஓகஸ்ட் 18ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்றது.

தமிழ் பொது வேட்பாளர் குறித்து எழுந்துள்ள நெருக்கடிகள்

அது தொடர்பில் ஏனைய நாட்களில் காணமுடியாத தமிழ் அரசியல் குறித்த விரிவான செய்தி அறிக்கை ஒன்று ஒகஸ்ட் 20 ஆம் திகதி தினமின சிங்கள நாளிதழில் பிரசுரிக்கப்பட்டமை வியக்கத்தக்கது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது குறித்து பல கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் (அந்த விபரங்கள் விரிவாக அங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது) காரசாரமான விவாதம் காரணமாகக் கட்சியின் தலைவர் எஸ். சிறீதரன் சபையிலிருந்து வெளியேறிய சம்பவத்தை முன்னிலைப்படுத்தி குறித்த சிங்கள மொழி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதே நாளில் லங்காதீப மற்றும் அருண பத்திரிகைகள் முறையே பின்வரும் தலைப்புச் செய்திகளுடன் ஒரே செய்தியை வெளியிட்டிருந்தன. ‘ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு யாருக்கு? ‘குழப்பத்தில் தமிழ் கூட்டணியின் ஒன்றுகூடல்’, ‘ஆதரவு வேட்பாளரைத் தெரிவு செய்யும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கூட்டம் குழப்பத்தில் நிறைவுபெற்றது.’

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரமும் தெற்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளும் | Sinhala News Papers Pov On Tamil Candidate

மேலும், ஒகஸ்ட் 21ஆம் திகதி தினமின, டெய்லி நியூஸ் மற்றும் டெய்லி மிரர் போன்ற சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK), தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தொடர்புபடுத்தி தமிழ் பொது வேட்பாளர் குறித்து எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

‘தமிழ் கூட்டமைப்பு ஒரு கட்சிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்ற தலைப்பில் தினமின செய்தி வெளியிட்டிருந்தது. ஆங்கில நாளிதழ்களிலிருந்து, டெய்லி நியூஸ், ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் சர்ச்சை’ மற்றும் டெய்லி மிரர் பத்திரிகை ‘தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடும் நடவடிக்கை’ போன்ற தலைப்புச் செய்திகளை வெளியிட்டது.

அதன்படி மேல் குறிப்பிட்ட மூன்று நாளிதழ்களிலும் வெளியான செய்திகளில், தமிழர் சுயேட்சை பொது வேட்பாளர் தேர்தலில் களமிறங்கியதால் தமிழ் கட்சிகள் பிளவுபட்டதாக முன்னிலைப்படுத்திச் செய்திகளைப் பிரசுரிக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

தமிழ் பொது வேட்பாளரை விமர்சித்து, அவருக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமாயின் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குறிப்பிட்ட செய்தி ஒகஸ்ட் 22ஆம் திகதி தினமின பத்திரிகையில் 17 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒகஸ்ட் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சிங்கள மற்றும் ஆங்கில நாளிதழ்களில் தமிழ் சுயேட்சை பொது வேட்பாளர் பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய தலைப்புகளுடன் சில செய்திகள் வெளிவந்தன. ஒகஸ்ட் 24ஆம் திகதி லங்காதீப நாளிதழின் 6ஆம் பக்கத்தில் ‘தமிழ் கூட்டமைப்பு பிழவு’ என்ற பிரதான தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதே போன்ற தலைப்பில் தமிழ் சுயேட்சை பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் எஸ்.சிறீதரன் முடிவு செய்துள்ளதாக இன்னொரு செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. டெய்லி மிரர் நாளிதழிலும் இதே செய்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்த அறிக்கை லங்காதீப பத்திரிகையில் வெளியான செய்தியின் தலைப்பு முதல் உள்ளடக்கம்வரை ஒத்ததாகவே காணப்படுகின்றது.

பிரிவினைக்குக் காரணமான கருத்து மோதல்

தென்னிலங்கைப் பத்திரிகைகளுக்குத் தமிழ் சுயேட்சை பொது வேட்பாளர் அல்லது அந்த வேட்பாளரை யார் ஆதரிப்பவர் என்பது அவ்வளவு முக்கியமல்ல, ஆனால் அந்த வேட்பாளரால் தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டுள்ளன என்பதை அவர்கள் மிகவும் விரும்பி வெளியிடும் செய்தியாகக் காணப்படுகின்றது.

அந்தப் பிரிவினைக்குக் காரணமான கருத்து மோதல் என்ன என்பதை சிங்கள வாசகருக்கு விளக்குவதில் எந்த தென்னிலங்கை பத்திரிகையும் ஆர்வம் காட்டவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஒகஸ்ட் 25ஆம் திகதி அன்று, சன்டே டைம்ஸ் பத்திரிகையில் தமிழ் சுயேட்சை வேட்பாளரை இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் ஆதரவளிக்கும் தீர்மானத்தைப் பின்வருமாறு “பொது வேட்பாளர் தொடர்பில் ‘ITAK’ கட்சியில் பாரிய பிளவு” என்ற தொனிப்பொருளில், குறித்த செய்தி வாசகர்களை தவறாக வழிநடத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுரையை தொகுக்கும் நேரத்தில் கூட, தமிழ் அரசுக் கட்சி தலைவரின் தீர்மானத்திற்குப் பிறகு, ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் எடுக்கும் நிலைப்பாடு குறித்து அந்தக் கட்சியின் வேறு எந்த பொறுப்புக்குரிய நபர்களும் பகிரங்கமாக எதையும் அறிவிக்கவில்லை.

மேலும், இந்த வார இறுதி அருண நாளிதழ் (25) தமிழ் சுயேட்சை வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுடனான நேர்காணலுக்கு அரைப் பக்கத்தை ஒதுக்கியுள்ளது. இந்த ஆய்வில், சிங்கள அல்லது ஆங்கில நாளிதழ் ஒன்றில் தமிழ் சுயேட்சை பொது வேட்பாளரைப் பற்றிய விவரமான கட்டுரையொன்று முதன்முறையாக வெளியிடப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

தமிழ் அரசியல்வாதி பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வடக்கு கிழக்கு தமிழ் அரசியல், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, தமிழருக்கான தனி வேட்பாளரை முன்வைப்பதற்கான காரணங்களைச் சிங்கள வாசகர்கள் கணிசமான அளவில் புரிந்துகொள்ளும் வகையில் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் தலைப்பு ‘நான் தோல்வி அடைவேன்’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு அரியேந்திரன் பின்வருமாறு பதிலளித்துள்ளார். “மற்ற வேட்பாளர்களைப் போல நான் பொய் சொல்லமாட்டேன். நான் பொது வேட்பாளராகப் போட்டியிட்டால் கூட, நான் வெற்றி பெறுவேன் என்று சொல்லவில்லை.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரமும் தெற்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளும் | Sinhala News Papers Pov On Tamil Candidate

தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர் அபிலாஷைகளை முன்னிறுத்துவதற்காக நாட்டின் ஜனாதிபதி பதவிக்குத் தான் போட்டி இடுகிறேன் என்பதை தவிர (மற்ற பெரும்பான்மை சிங்கள வேட்பாளர்களைப் போலல்லாமல்) ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு அல்ல என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

இன்னொரு ஜனாதிபதி வேட்பாளருக்கு உரிமையான பத்திரிகையில் “நான் தோல்வி அடைவேன்” என்ற தலைப்பில் செய்தி பிரசுரிப்பது சிங்கள வாசகர்களின் மத்தியில் அரியேந்திரன் தேர்தலில் தோல்வி அடைவது குறித்தா? அல்லது அவர் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் அபிலாஷையின் தோல்வி குறித்தா? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.

வடக்கில் தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளராகத் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகவியலாளருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடுகிறார் என்பது பெரும்பான்மையான சிங்கள மக்கள் அறியாமை தொடர்பில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

ஆனால் அந்த வேட்பாளர் காரணமாக வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றி, தமிழ் மக்கள் முன்னரை போன்று தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்காமல் அவர்களில் ஒருவரையே முன்னிறுத்துவது சரியான முடிவு அல்ல என்று சிங்கள மக்களின் மனதில் எண்ணம் தோன்றுமாயின் மற்றும் பெருன்பான்மை சிங்கள மக்கள் அது தொடர்பில் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள் என்றாலும் கூட அது குறித்து வியப்படைய வேண்டியதில்லை.

ஏனெனில் மக்கள் மனதை வெகுசன ஊடகங்கள் கையாள்வதன் விளைவே இது.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் அனுராதபுரத்தில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது ஜனாதிபதி வேட்புமனு தொடர்பான பிரசாரங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முன்னர், ஒகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களில், நாமல் ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன தமிழ் இளைஞர்களுடன் நெருக்கமாகச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் பல தமிழ்ப் பத்திரிகைகளில் (தினகரன், காலைகதிர், ஈழநாடு) செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.

இந்தச் செய்தியை மேலோட்டமாக பார்க்கும் போது, நாமல் ராஜபக்ச தனது குடும்பத்தின் கடந்த கால மரபின் சுமையிலிருந்து விடுபட்டு, தமிழ் மக்களுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு உண்மையில் விருப்பு தெரிவிக்கிறார் என்றே தோன்றும்.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரமும் தெற்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளும் | Sinhala News Papers Pov On Tamil Candidate

அந்த நாட்களில் தமிழ் பத்திரிகைகள் நாமலின் அரசியல் திருப்பம் பற்றிய செய்திகளை ஒரு குழப்பத்திற்குரிய விடயமாகவும் ஆனால் ஓரளவு திருப்புமுனை கொண்ட நம்பிக்கை அளிக்கும் செய்தியாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நாமல் ராஜபக்சவின் ஆரம்ப பிரச்சார பேரணி முதல் அவரின் உண்மை முகம் வெளிக்கொணரப்பட்டது. நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தின் முதலாவது பேரணி கடந்த ஒகஸ்ட் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்றதுடன் மறுநாள் திவயின மற்றும் அருண பத்திரிகைகள் புகைபடங்களுடன் கூடிய விரிவான செய்தியை வழங்கியிருந்தன.

விரிவான அறிக்கைகள் லங்காதீப மற்றும் ஒகஸ்ட் 23 அன்று சனிக்கிழமை (25), சண்டே ஒப்சர்வர் பத்திரிகையிலும் வெளியிடப்பட்டன. நான்கு பத்திரிகை செய்தி அறிக்கைகளும் பொருள் மற்றும் விளக்கக்காட்சியில் ஒரே மாதிரியானவை.

ஆங்கிலப் பத்திரிகை உட்பட ஏனைய மூன்று சிங்களப் பத்திரிகைகளும் ராஜபக்ச குடும்ப கழுத்தணித்துண்டு நிறத்தைப் பயன்படுத்தி செய்தி அறிக்கைக்கு வண்ணம் தீட்ட முனைந்தன என்பது தெளிவான விடயமாகும். மேலும், மூன்று சிங்களப் பத்திரிகை அறிக்கைகளும் மிகவும் ஈர்க்கக்கூடிய சில புகைப்படங்களைப் பயன்படுத்தி செய்தி அறிக்கையைத் தெளிவாக முன்வைத்திருந்தன.

நான்கு செய்தித்தாள் அறிக்கைகளிலும் நாமல் ராஜபக்ச மேலாண்மையை தழுவிய சிங்கள பௌத்த பிரஜைக்கு உரையாற்றிய விதம் பற்றியதாகும். அந்த உரையில், போரையும், இராணுவ வீரர்களையும் மகிமைப்படுத்தியதுடன் தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்த போதிலும் வடக்கு கிழக்கு ஒருபோதும் இணைக்கபடாது போன்ற விடயங்களை நாமல் ராஜபக்ச குறிப்பிட்டதாகச் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச என்ற இளைஞனிடமிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை உண்மையாக உணரும் அரசியல்வாதி உருவாகுவாரென எதிர்பார்த்த தமிழ்ப் பத்திரிகைகள் அந்தக் கதையின் உள்ளடக்கத்தையும் மிகச் சுருக்கமாகச் செய்தி வெளியிட்டிருந்தன.

காலைமுரசு, ஈழநாடு, தமிழ் மிரர், தினகரன் நாளிதழ்களில் வெளியாகிய செய்திகளில் ஏறக்குறைய ஒவ்வொரு செய்திகளிலும், வடக்கு கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது, வடக்கு கிழக்கை ஒரு போதும் இணைக்கப் போவதில்லை என்ற பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு பற்றிய செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரமும் தெற்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளும் | Sinhala News Papers Pov On Tamil Candidate

அனுராதபுர பேரணியில் மக்கள் மத்தியில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச உட்பட குறித்த கட்சியின் எந்தவொரு அரசியல்வாதிகளின் உரைகளின் உள்ளடக்கத்தையும் அரசாங்கத்தின் சிங்கள பத்திரிகைகள் எதுவும் செய்தியாக வெளியிடவில்லை.

அன்று மக்களிடம் உரையாற்றிய டபிள்யூ.டி.வீரசிங்க, சாகர காரியவசம், சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே நாடு, 13ஆவது அரசியலமைப்பை அமுல்படுத்துவதில்லை, இராணுவ வீரர்களைக் காட்டிக்கொடுப்பதில்லை, போரை முடிவுக்குக் கொண்டுவந்தமை, சிங்கள பௌத்த பெருமைக்குரிய வரலாறு போன்ற தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்து, சிங்களத் தேசியத்தைப் போற்றுகின்ற, தேசப்பற்றைப் போற்றுகின்ற கோஷங்களால் நிரம்பியிருந்தது.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரமும் தெற்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளும் | Sinhala News Papers Pov On Tamil Candidate

அந்தக் கதையின் உள்ளடக்கம் முழுக்க முழுக்க சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது. அனைத்து பாரம்பரியக் கட்சிகளும் தற்போது கலவன் நிலையில் இருக்கும் நிலையில், நாமல் ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன ‘கறுப்பு சிங்களவர்களின்’ சமூகப் பற்றை எழுப்பி, குறைந்த பட்சம் ஜனாதிபதித் தேர்தலில் அதீத தோல்வியிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது.

ஏனைய தெற்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் கோரிக்கை மற்றும் வாக்குறுதிகளைச் சிறுபான்மையினருக்கு வழங்கி அவர்களின் கணிசமான வாக்குகளையும் பெற்றுகொள்ள முயற்சிக்கும் அதே வேளையில் சிங்கள பௌத்த வாக்குகளையும் பாதுகாத்துக் கொள்ளும்போது நாமல் ராஜபக்சவின் குறித்த முயற்சி அபாயத்தை எதிர்கொள்கின்றது.

தற்போது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த வாக்குகளை இழக்காமல் இருப்பதற்காக நாமல் ராஜபக்சவின் ‘தேசபக்தி’ கருத்துக்கள் குறித்து அரசாங்க சிங்கள பத்திரிகைகள் எதையும் வெளியிடுவதில்லை.

மேலும், சண்டே ஒப்சர்வர் போன்ற அரசாங்க ஆங்கில நாளிதழ் அரசாங்க சிங்கள பத்திரிகைகளைவிட சற்று வித்தியாசமான ஊடக நடைமுறையைப் பயன்படுத்தியது, ஒருவேளை நாமலின் சிங்கள பௌத்த இனவாதத்தை இராஜதந்திர சமூகத்திற்கும் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மக்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியாகவும் இருக்கலாம்.

எது எவ்வாறாயினும், இந்த நாட்டில் பெரும் அழிவை ஏற்படுத்திய யுத்தத்தையும், தமிழ் இனப்படுகொலையையும் மேற்கொண்டதாகக் கூறப்படும் இரத்தம் சிந்தப்பட்ட கோர வரலாற்றை இன்னும் சிங்கள பௌத்த மக்களிடத்தில் பெருமிதப்படுத்தி இனவாதத்தை கூறி அவர்களைத் தவறான வழியில் வழிநடத்த முடியும் என்பதையும், இந்நாட்டில் அரசியல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்ற எந்தளவுக்கு இனவாதம், மதவாதத்தை முதலீடாக இன்னும் பயன்படுத்த முடியும் என்பதையும் புரிந்துகொள்ள இந்த முறை நாமல் ராஜபக்சவிற்கு கிடைக்கப்பெறும் வாக்கின் அளவிலிருந்து புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும்.

வடக்கே சூடுபிடிக்கும் ஆனால் தெற்கிற்கு தெரியாத செய்திகள்

ஒகஸ்ட் 22 அன்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இலங்கை தொடர்பான புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றரை ஆண்டுகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவாகிய சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான கிட்டத்தட்ட 3,000 முறைப்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி சண்டே டைம்ஸ் நாளிதழின் முதற்பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், வோல்கர் டர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரமும் தெற்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளும் | Sinhala News Papers Pov On Tamil Candidate

அதேசமயம், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக வெளியான குறித்த அறிக்கை தொடர்பாக ஒகஸ்ட் 23ஆம் திகதி புதிய சுதந்திரன் மற்றும் ஈழநாடு பத்திரிகைகளில் முதல்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆனால் அந்த அறிக்கை தென்னிலங்கையில் எந்த ஒரு சிங்களப் பத்திரிகைக்கும் முக்கியமான செய்தியாகக் காணப்படவில்லை அல்லது அந்த அறிக்கை தேர்தலை முன்னிட்டு சிங்கள மக்களிடமிருந்து மறைக்கப்பட வேண்டிய செய்தியாகக் காணப்படுகின்றது.

ஐந்து வடக்கு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு அருகில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரமும் தெற்கு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளும் | Sinhala News Papers Pov On Tamil Candidate  

54 பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மீண்டும் திறந்து, சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சம்பவத்தைப் புதிய சுதந்திரன், ஈழநாடு, தினகரன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளில் விரிவாகச் செய்தி பிரசுரிக்கப்பட்டன. ஒகஸ்ட் 21 அன்று, அருண பத்திரிகையைத் தவிர தென்னிலங்கை சிங்கள அல்லது ஆங்கிலப் பத்திரிகைகள் எதுவும் இந்தச் சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்படவில்லை.

‘மனித புதைக்குழி’ என்ற வார்த்தை கூட ஒரு தார்மீக மற்றும் பொறுப்பான சமூகத்தின் பொது நனவை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அங்குப் புதைக்கப்பட்டிருப்பது யாருடையாவது அன்புக்குரியவர்களின் சடலங்களாக இருக்க முடியும். வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி, அதற்காகப் போராடும் உறவினர்கள் குழு இன்றும் அது தொடர்பாகத் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடி வருகின்றது.

இத்தகைய மனித புதைகுழிகளில் வெளிப்படும் மனித எலும்புக்கூடுகளுக்கு முன்னால் அந்த உறவினர்களின் சோக உணர்வுகளை ஒரு சமூகமாக நாம் தாங்க முடியுமா? இவ்வாறானதொரு நிலை இருந்தும் இது போன்ற செய்திகள் ஏதாவதொரு காரணத்திற்காகச் சிங்கள சமூகத்திற்கு மறைக்கப்பட்டாலும் அந்தக் கொடூரமான அநீதியும் தமது அன்புக்குரியவர்களை இழந்த கொடுமையை பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளிலிருந்து மறைக்க முடியாது.

கட்டுரை – சுபாஷினி சதுரிகா
மொழிபெயர்ப்பு – ரிக்சா இன்பாஸ்     
  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.