சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாலே பிரச்சினைகள் தோன்றுவதாக
இலங்கையின் பிரதான பழங்குடியினத் தலைவரான, ஊருவரிகே வன்னியலெத்தோ தெரிவித்துள்ளார்.
உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “நாமும் எமது உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக பல அரசாங்கங்களிடம் பல பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எவ்வித தீர்வும் பெற்றுக் கொடுப்படவில்லை.
புதிய அரசாங்கமும் எமது உரிமைகளை பாதுகாப்பதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெரும்பான்மை சமூகம்
1983ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு மீனை பிடித்து தரையில் விட்டு உயிர் வாழுமாறு சொல்லும் சிந்தனை கொண்டவர்களாக உள்ளனர்.
உரிமைகளை வழங்காமல் சுதந்திரமாக ஒரு சமூகத்திற்கு வாழ முடியாது. இனப்பிரச்சினைக்கும் இதுவே காரணமாகும். படைப்பில் மனிதனாக இருப்பவன் சமூகத்தில் அவன் மாற்றப்படுகிறான். சாதி, மதம், உயர்வு, தாழ்வு, ஏழை, பணக்காரன் என பிரிக்கப்படுகிறான். சமூகத்திலேயே பிரிவினைகள் உருவாக்கப்படுகின்றன.
இந்த பிரிவினைகள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதிக்கும் காரணிகளாகின்றதன.
ஒவ்வொரு இன குழுவுக்கும் அவர்களுக்குரிய கலாசாரம், சம்பிரதாயம், பண்பாடு என்பன காணப்படுகின்றன.
இவை பெரும்பான்மை மக்களால் மறுக்கப்படுகின்றன. ஒவ்வொரு மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதன் ஊடே நாட்டின் அபிவிருத்தி சாத்தியமாகும்” என தெரிவித்துள்ளார்.