நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு நேற்று (05) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறு கலந்துரையாடிலும் ஈடுபட்டார்.
மக்களுக்கான நற்செய்தி
இதன் பின்னர் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக நாங்கள் இப்போது தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் வர்த்தக கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடலை முடித்துள்ளோம்.
நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
அதேபோன்று, கடனை செலுத்துவதற்கு 04 வருட கால அவகாசம் மற்றும் கடனை முழுமையாக செலுத்த 2043 வரை கால அவகாசம் பெறவும் முடிந்துள்ளது. இந்த நலன்களைப் பயன்படுத்தி இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.
அதற்காக, அடுத்த இரண்டு வருடங்களில் திட்டமிட்ட வகையில் செயற்பட்டால் மீண்டும் கடன் பெறாத நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முடியும்.
பௌத்த நாடான தாய்லாந்து இன்று திறந்த பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளது.
1950 இல் தாய்லாந்து இலங்கையை விட இரண்டு மடங்கு கடனில் இருந்தது. ஆனால் இன்று, ஏற்றுமதியின் அடிப்படையில் சாதகமான பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.