கடந்த 2022ஆம் ஆண்டைப் போன்றதொரு கடுமையான பொருளாதார நெருக்கடி இனி ஒருபோதும்
நாட்டில் ஏற்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால்
வீரசிங்க நாட்டு மக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.
பூகோள அரசியல் மற்றும் எதிர்மறையான உலகளாவிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு,
உள்நாட்டில் பணவீக்கம் எதிர்வரும் காலப்பகுதிகளில் 7 சதவீதம் வரை
அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்ட போதிலும், அடுத்த மூன்று
மாதங்களுக்குள் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்விகளைச் சமப்படுத்தி
அதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு
சுட்டிக்காட்டினார்.
அதிகரித்த பணவீக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் நிலைமைகள் ஆரம்பமான சந்தர்ப்பத்தில்,
அது குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவடையும் என்றே அப்போதைய பூகோளக் காரணிகளை
அடிப்படையாகக் கொண்டு எதிர்பார்க்கப்பட்டது.
அதன் காரணமாக, 2 சதவீதமாகக்
காணப்பட்ட பணவீக்கமானது 4 சதவீதமளவில் மாத்திரமே அதிகரிக்கக்கூடும் என்று
மதிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள
தற்போதைய பின்னணியில், சர்வதேச ரீதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான
கப்பல் போக்குவரத்துச் செலவுகள் கணிசமாக உயர்வடைந்துள்ளன.

இவ்வாறான நெருக்கடி
நிலைமையினால், கடந்த ஒரு மாத காலத்துக்குள் உள்நாட்டுப் பணவீக்கம் 5.5
சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று
மாதங்களில் மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதிச் செலவீனம் 2 பில்லியன்
டொலராகப் பதிவாகியுள்ளது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களின் விலைகள்
அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இணையாகத் தேசிய மட்டத்திலும் எரிபொருள்
விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனால், உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக்
கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது கியூ.ஆர்.
கோட்டா முறையை மீண்டும் கடுமையாக நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் காலப்பகுதியில் பணவீக்கம் 7 சதவீதமளவில்
உயர்வடைவதற்குச் சாத்தியமிருந்தாலும், எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள்
சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையைச் சமப்படுத்தி,
பணவீக்கத்தைக் குறைப்பதற்குக் கடுமையான நாணயக் கொள்கை நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டின் பொருளாதாரச் சீரழிவு நிலைமைதான் தற்போதைய 2026ஆம்
ஆண்டும் காணப்படுகின்றது எனக் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில், 2022ஆம் ஆண்டு உள்நாட்டு மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான மற்றும்
தன்னிச்சையான பொருளாதாரத் தீர்மானங்களினால்தான் நாடு பாதிக்கப்பட்டுப் பாரிய
நெருக்கடிகள் ஏற்பட்டன.
அவ்வாறானதொரு பலவீனமான நிர்வாகத் தன்மை தற்போது
அரசிடம் கிடையாது.
தற்போதைய அழுத்தங்கள் அனைத்தும் முற்றிலும் பூகோளப் போர்ச்சூழல் மற்றும்
உலகளாவிய காரணிகளினால் ஏற்பட்டவையாகும்.
இந்த நெருக்கடியைச் சிறந்த முறையில்
முகாமைத்துவம் செய்யக்கூடிய பலம் மத்திய வங்கிக்கு உள்ளது. தற்போது வரவு –
செலவுத் திட்டப் பற்றாக்குறை சீராக முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளதுடன்,
இலங்கை ரூபா மற்றும் டொலர் கையிருப்பும் மிக ஸ்திரமான மட்டத்தில் பேணப்பட்டு
வருகின்றது. பணவீக்கமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது.
ஆகவே, 2022ஆம் ஆண்டு
ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான பொருளாதார நெருக்கடி மற்றும் வரிசை யுகம் நாட்டில்
இனி ஒருபோதும் ஏற்படாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் என்ற அடிப்படையில்
நாட்டு மக்களுக்குப் பொறுப்புடன் உத்தரவாதம் அளிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1780482243

