இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிக்கும் அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் கவலை வெளியிட்டுள்ளது.
முதலீட்டு வாரியத்தின்(BOI) கீழ் இலங்கையில் ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களை கஞ்சா பயிரிட அரசாங்கம் அனுமதித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள நிலையில், குறித்த அனுமதி முற்றுமுழுதாக ஏற்றுமதி நோக்கங்களுக்கானது என அரசாங்கம் தெரிவித்திருந்தது.
கடுமையான ஆபத்து
கஞ்சா செடியின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார நன்மைகளை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை மருத்துவ சங்கம், மனநல மருத்துவர்கள் கல்லூரி, சமூக மருத்துவர்கள் கல்லூரி மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இதேபோன்ற ஒரு திட்டம் முன்னதாக கைவிடப்பட்டதை மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நிர்வாக இயக்குனர் சம்பத் டி சேரம் நினைவு கூர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்த திட்டத்தை எதிர்த்த தற்போதைய முதலீட்டு ஊக்குவிப்பு துணை அமைச்சர், இப்போது தனது முடிவை மாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை இலங்கையின் சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் எனவும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

