எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளன ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) தான் ஆதரவளிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Ashoka Priyantha) தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கட்சித் தாவல்கள்…
இதேவேளை, அசோக பிரியந்த, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்க முன்னர் தீர்மானித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது மிகுந்த ஆரவாரம் காட்டி, வரவேற்றவர்களே தற்போது ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக அரசில் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், கட்சித் தாவும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.
இந்தநிலையில், இந்த வாரம் கட்சித் தாவல்கள் மற்றும் அது தொடர்பான அறிவிப்புக்கள் அதிகமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி அவரோடு இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த வாரம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெருமளவான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன முன்னர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ரணில்
விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச
சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் இணைந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசத்துடனான
சந்திப்பின் பின்னரே இவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் – ராகேஷ்