Courtesy: Sivaa Mayuri
இலங்கை அரசாங்கத்திற்கும் இறையாண்மை பத்திரதாரர்களின் தற்காலிக குழுவிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியம் கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின், இலங்கைக்கான மூத்த தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூயர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், “இந்த முன்னேற்றம் குறித்த கூடுதல் தகவல்களுக்காக சர்வதேச நாணய நிதியம் காத்திருக்கின்றது.
இறையாண்மை பத்திரங்கள்
இந்த நிலையில், குறித்த விடயத்தில் உடன்பாடு எட்டப்பட்டதும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுத் திட்டத்தின் கீழ் அளவுருக்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை நோக்கங்களுடன், அது ஒத்துப்போவது உறுதிசெய்யப்படும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, 2024 ஜூன் 21 முதல் ஜூலை 2ஆம் திகதி வரை, தமது சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் தொடர்பாக பத்திரதாரர்களின் வழிநடத்தல் குழுவுடன் மட்டுப்படுத்தப்பட்ட விவாதங்கள் நடைபெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
இதன்முடிவில் தற்போதுள்ள பத்திரங்களின் பெயரளவு கடன் தொகையில் 28 வீதத்தை குறைக்க பங்குதாரர் தரப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது.
சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து நிதிகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு முறையாக செயல்படுகின்றன.
செலுத்த வேண்டிய கடன்
மேலும், 2007இல் நடுத்தர வருமான அந்தஸ்தை அடைந்ததிலிருந்து, உயர்ந்த வட்டி விகிதத்தில் இருந்தாலும், உலகளாவிய திறந்த சந்தையில் இருந்து கடன்களைப் பெறுவதற்கு இலங்கை இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், 2022இல் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தவறியதைத் தொடர்ந்து, இலங்கை இப்போது 12.5 பில்லியன் டொலர் இறையாண்மை பத்திரக் கடனைக் கொண்டிருக்கிறது.
இந்த கடனுக்கான திரட்டப்பட்ட வட்டி நிலுவை மாத்திரம் கிட்டத்தட்ட 2.9 பில்லியன் டொலர்களாகும்.
அதேவேளை, செய்து கொள்ளப்படவுள்ள புதிய உடன்படிக்கையின்படி, இலங்கை இந்த கடனை 2028 செப்டம்பர் முதல் செலுத்தவுள்ளது.