அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற கைதுகள் எமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“தற்போது கைது செய்யப்படுகின்றவர்கள் எந்த நிலையில், எப்படி கைது செய்யப்படுகிறார்கள் என்பதை வைத்துப் பார்க்கின்ற போது அரசாங்கத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் நிலவுகின்றது.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்
தற்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற சந்தர்ப்பத்தில், இந்த கைதுகள் இடம்பெறுகின்றன. இதில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.
மேலும், மீண்டும் இந்த ராஜபக்ச அணியினரை பலப்படுத்துவது உள்நோக்கமாக இருக்குமோ என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில், நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்ற விடயம் என்னவென்றால், நீங்கள் தேர்தல் காலங்களில், மேடைகளில், என்ன விடயங்களை கூறினீர்களோ அந்த விடயங்களை நிறைவேற்றுங்கள். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.