சில குறிப்பிட்ட குற்றச்செயல்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) எடுத்துள்ள முடிவு குறித்து சுவிட்சர்லாந்து (Switzerland) கவலை தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் போன்ற அரசு அதிகாரிகளை கொலை செய்தல் மற்றும் பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆவணங்களற்ற நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க அட்டர்னி ஜெனரல் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறும் அரசாணை ஒன்றில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அத்தோடு, ஃபெடரல் மட்டத்தில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் ட்ரம்ப் ரத்து செய்துள்ளார்.
மனித உரிமைகள்
இந்தநிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிய, வெளியுறவு அமைச்சகத்தின் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த Tim Enderlin, சிறைத் தண்டனைக்கு பதிலாக மரண தண்டனை விதிப்பதால் குற்றச்செயல்கள் குறைந்துவிடும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், சுவிட்சர்லாந்து, நீண்ட காலமாகவே மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருவதுடன் மரண தண்டனையை ஒழிக்க போராடியும் வருவது குறிப்பிடத்தக்கது.