இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களையும் மீன்பிடிப்படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கோரி தொடர்ந்தும் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தங்கச்சி மடம் வலசை பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்க முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தொடர் போராட்டம்
தொடர்ச்சியாக நேற்றைய தினம்(02) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு அபராதம் விதித்தும் அவர்களை கண்டுக்கொள்ளாத மத்திய அரசை எதிர்த்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.