புதிய இணைப்பு
இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா பதவி வகிப்பதுடன் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் பதவி வகிப்பார் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானமானது, கட்சியின் யாப்பின் அடிப்டையில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த கூட்டத்தில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வெளிநடப்பு செய்துள்ளார்.
இதன்போது, அவர், மத்தியகுழுவினால் பதில் தலைவரை நியமன் செய்ய முடியாது. அது பொதுகுழுவின் நடவடிக்கை என கூறி மத்திய குழுவின் குறித்த தீர்மானம் தவறானது என சுட்டிக்காட்டி அவர் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக
கட்சியின் மத்திய குழு வவுனியாவில் (Vavuniya) கூடியுள்ளது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில்
இன்று (28.12.2024) குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
கடந்த மத்தியகுழுக் கூட்டத்தில் கட்சியின் தலைமை தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்று
குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
மாவையின் பதவி விலகல்
அந்தவகையில், கட்சியின் தலைவரான மாவை
சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்பதா அல்லது அவரே தொடர்ந்து தலைவராக
செயற்படுவதற்கு அனுமதிப்பதா என்பது தொடர்பாக வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு
கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர், தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவிற்கு இல்லை எனத்
தெரிவித்து வழக்கு தாக்கல் ஒன்றும் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து
கொள்ளவில்லை.
மேலும், சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில், பதில் செயலாளர்
ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன்,
து.ரவிகரன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா,
த.கலையரசன், சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து
கொண்டுள்ளனர்.