தியாகதீபம் திலீபனின் நினைவு நாளை ஈழத்தமிழர்கள் உணர்வோடு கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்த அவரது உருவச்சிலையை இலங்கை பொலிஸார் அகற்றி எடுத்துச் சென்றிருப்பது பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர்,
தங்களுக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் பொலிஸார் தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது.
உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன்.
திலீபனின் உருவச்சிலை
அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்?
உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா?
இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.
ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறதா?

சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது.
அகிம்சையின் அடையாளமான தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய இலங்கை பொலிஸாரின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது!
இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும்.
இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன; ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன.
பொலிஸாரின் நடவடிக்கை
ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது.
உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும்.
தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்?
ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும்.
தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸாரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அகற்றப்பட்ட சிலையை உரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
You may like this…
Source: https://tamilwin.com/article/thileeban-statue-removed-seeman-condemnation-1790582115

