மாவீரர்களின் பெற்றோர்களை
கெளரவப்படுத்தும் நிகழ்வொன்று அராலியில் (Arali) நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்றையதினம் (26) அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின்
மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு
நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர்
அதனைத் தொடர்ந்து மூன்று பிள்ளைகளை
மண்ணுக்காக கொடுத்த குணராசா கமலாதேவி பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.

அதனைத்
தொடர்ந்து ஏனையோர் ஈகைச்சுடர்களை ஏற்றி வைத்தனர். பின்னர் உயிர்நீத்த உறவுகளது
திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோருக்கு நினைவுச் சின்னமாக
தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கௌரவப்படுத்தும் நிகழ்வு
இறுதியாக தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70வது பிறந்தநாளானது கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sritharan) ,
தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் சேனாதிராஜா
கலையமுதன், மாவீரர்களின் பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்வு
இதேவேளை, திருகோணமலை, சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நாளை நினைவேந்தல்
நிகழ்வை செய்வதற்கான அலங்கார வேலைப் பணிகளும், அதற்கான முன்னாயத்த
ஏற்பாடுகளும் இன்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனை சம்பூர் ஆலங்குளம் மாவீரர்
நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்திருந்தது.

இதன்போது வரவேற்பு கோபுரம் அமைத்தல், கொடிகள் கட்டி தொங்கவிடல், மாவீரர் நாள்
நினைவேந்தலில் கலந்து கொள்வோருக்கான மரக்கன்று வழங்குவதற்கான ஏற்பாடுகளும்
செய்யப்பட்டன.
மேலும் சம்பூர் ஆலங்குளத்தில் இடம் பெற உள்ள நினைவேந்தலில் கலந்து கொள்ள
உள்ளோருக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நினைவேந்தல்
ஏற்பாட்டு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
Source: https://ibctamil.com/article/tribute-to-war-heroes-parents-at-aarali-jaffna-1732625340

