பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பதற்கு குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட வேண்டுமென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராசபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் மற்றும் கலை ஆகும் எனவும் நாமல் கூறியுள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பட்சத்தில் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டிகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர், கூறியுள்ளார்.
போக்குவரத்து விதிகள்
போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் சட்டங்களும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அலங்கார நடவடிக்கைகளில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
க்ளீன் ஸ்ரீலங்கா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, முறையற்ற அலங்கரிப்புடைய தனியார் போக்குவரத்து நடத்துநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி நடத்துபவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனினும் இந்த செயல்பாடு பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமான சுத்தமான இலங்கையை 2025 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஆரம்பித்து வைத்தார்.
மோட்டார் போக்குவரத்துச் சட்டம்
இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தை மீறுவதாகவும் கூறி, அலங்காரங்களாக பயன்படுத்தப்படும் கூடுதல் உபகரணங்களை அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் வாகனங்களில் உள்ள அலங்கார கொம்புகள், பிரகாசமான விளக்குகள் என அனைத்து கூடுதல் அம்சங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.
மேலும், பேருந்துகளில் பயணிக்கும் இரகசிய பொலிஸார், ஓட்டுநர்களால் முன்னெடுக்கப்படும் நெடுஞ்சாலைக் குறியீடு மீறல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், தனியாருக்குச் சொந்தமான பேருந்து நடத்துநர்கள் ஒழுக்கம் மற்றும் சாலைப் பாதுகாப்பைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய நெடுஞ்சாலைக் குறியீட்டை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் 2,359 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதல் 11 மாதங்கள்
2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசு சாரா பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் 198 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘தூய்மையான இலங்கை’ பிரச்சாரமானது நாட்டின் ஆழமாக அழிந்துபோன மற்றும் சீரழிந்துள்ள சமூக சூழல் கட்டமைப்பை மீட்டெடுப்பதான இலக்கை கொண்டது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்கள் மீதான கரிசனையை வளர்ப்பது அவசிய தேவை எனவும் கூறியுள்ளார்.
எனினும், நமது நாட்டில் சாலை விபத்துக்களால் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் ஏழு பேர் உயிரிழக்கின்றமை குறிப்பிடத்தக்கது.