சவுதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சாணக்கியன் இராசமாணிக்கம், இந்த வழக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகமும் கையாண்ட விதம் மற்றும் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தில் பேஸ்புக் கருத்தொன்றுடன் தொடர்புடைய வழக்கில் ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு அனோஜனின் குடும்பத்தினருக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்ற சட்ட ஆலோசனையில், மேல்முறையீட்டின் மூலம் தண்டனையைக் குறைப்பதற்கோ அல்லது தீர்ப்பை மாற்றுவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு என மதிப்பிடப்பட்டிருந்ததாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தினர் மதத் தலைவர்கள் ஊடாக மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு மற்றும் கருணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேல்முறையீட்டு நடவடிக்கைக்காக குடும்பத்தினர் ரூ.1,890,766 சட்டக் கட்டணமாக செலுத்தியுள்ளதாகவும், இந்தத் தொகை வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகவும் சாணக்கியன் கூறியுள்ளார்.
அமைச்சினால் பின்னர் வழங்கப்பட்ட ஆவணங்களின்படி, கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் குடும்பத்தினர் அதற்கு முன்னரே மேல்முறையீடு செய்யுமாறு கோரியிருந்ததாக தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மேல்முறையீட்டு ஆவணம் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட கடிதம் செப்டெம்பர் 16ஆம் திகதியிடப்பட்டுள்ளதாகவும், இந்தக் காலதாமதம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மேல்முறையீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட சட்டத்தரணிக்கும் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள வேறுபாடு குறித்தும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாகவும், மேல்முறையீட்டின் வெற்றிக்கான வாய்ப்பு குறைவு என சட்ட ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில் குடும்பத்தினருக்கு ஏன் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது, சட்டத்தரணியை யார் நியமித்தனர், சட்டக் கட்டணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது மற்றும் முழு நடவடிக்கையையும் வெளிவிவகார அமைச்சும் தூதரகமும் எவ்வாறு மேற்பார்வை செய்தன என்பது தொடர்பில் பதில் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், செப்டெம்பர் 17ஆம் திகதி வெளியான செய்திகளின்படி, சவுதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த மரண தண்டனை தொடர்பில் சவுதி அரேபிய அதிகாரிகளிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
எனவே, தீர்ப்பின் முழுமையான பிரதியையும் வழக்கு நடவடிக்கைகளின் பதிவுகளையும் இலங்கை அரசாங்கம் சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சவுதி அரேபிய சட்ட நடைமுறைகளை நன்கு அறிந்த அனுபவமிக்க மற்றும் சுயாதீனமான சட்டத்தரணியின் உதவியை உடனடியாக உறுதிப்படுத்துவதுடன், கிடைக்கக்கூடிய அனைத்து சட்டரீதியான மேல்முறையீட்டு மற்றும் மறுஆய்வு வாய்ப்புகளையும் ஆராய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு பெறுவதற்கும் மரண தண்டனையை மாற்றுவதற்குமான நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிவிவகார அமைச்சர் தனிப்பட்ட முறையில் இந்த விடயத்தில் தலையிட்டு சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடன் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டும் என்றும், தேவையானால் சவுதி அரேபியாவின் உயர்மட்டத்தில் இலங்கை அரசாங்கம் தலையீட்டை கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இது ஒரு சாதாரண தூதரக நடவடிக்கையாக கருதக்கூடிய விடயம் அல்ல. ஒரு இலங்கைப் பிரஜையின் உயிர் தொடர்பான விடயம்” என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் தாமதிக்கக் கூடாது என்றும், சட்ட, இராஜதந்திர, தூதரக மற்றும் மனிதாபிமான ரீதியாக கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் அரசாங்கம் உடனடியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

