தற்போதைய அரசாங்கம் நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைகளையும், விவசாயிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களையும் மறந்து, மக்களின் கவனத்தை வேறு திசைக்கு திருப்ப முயல்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அதுகோரள குற்றம் சாட்டியுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (2026.08.11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
அரசாங்கத்தின் அமைச்சர்களான லால் காந்த மற்றும் எரங்க ஆகியோர், “நாங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், இன்னும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை” எனக் கூறி வருகின்றனர்.
அந்த அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே மக்களின் உண்மையான பிரச்சினைகளையும், அவர்களின் சுமையையும் மறைத்து வேறு விவகாரங்களை அரசாங்கம் முன்னிலைப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் தற்போதைய அரசின் அரசியல் ரீதியான முதிர்ச்சியற்ற தன்மையை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, முப்பீட மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் நிராகரிக்கும் ஒரு ஜனாதிபதியும் அரசாங்கமுமே இன்று நாட்டில் உள்ளது. வரலாற்றுக் காலம் தொட்டே ஸ்ரீ தலதா மாளிகையையும் ஸ்ரீ தலதா மாளிகையின் புனிதப் பொருட்களையும் பாதுகாத்து வந்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தமக்குக் கிடைக்கவில்லை எனக் கூறுவது, நாட்டின் மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் செயலாகும். இதற்கு முன்னர் எந்தவொரு தலைவரோ அல்லது அரசாங்கமோ மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை புறக்கணித்ததில்லை.
அத்துடன், அரசாங்கத்திற்கு எதிராளிகளை ஒடுக்குவதற்காகவே சிறைச்சாலைகளைப் பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். சிறைச்சாலைகளில் கைதிகளின் நெருக்கடிகளை அதிகரித்து, அங்கு கலவரங்களை உருவாக்குவதன் மூலம் சிறைச்சாலைக்குள்ளேயே மரணங்கள் சம்பவிப்பதை சாதாரணமாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.
தமது அரசியல் தோல்விகளை மறைப்பதற்காக, அரசியல் எதிரிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குத் தமது கட்சி ஆதரவாளர்களை நியமிப்பதன் மூலம் அரசு அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது தவறான கணக்கீடாகும். நீதிமன்றத்தையும் ஏனைய அரச நிறுவனங்களையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டின் அபிவிருத்திக்கு உழைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

