‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளர்களின் பணத்தை மோசடி செய்யும் நோக்கில் நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட நிதி மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பில், பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அஸ்வெசும பயனாளர்களை தொடர்புகொள்ளும் சிலர், தங்களை நலன்புரி நன்மைகள் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் தகவல்களை புதுப்பிப்பதாகவும், வேறு போலியான காரணங்களைக் கூறியும், அவர்களிடம் இருந்து பணம் கோரும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான தொலைபேசி அழைப்புகளுக்கும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், சபையின் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் இவை முற்றிலும் சட்டவிரோதமான மோசடி நடவடிக்கைகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறான போலி அழைப்புகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பயனாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சம்பவங்கள் தொடர்பில் அந்தந்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் உத்தியோகபூர்வ முறைப்பாடுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய கள அதிகாரிகள் கிராம மட்டங்களில் இது தொடர்பில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
எனவே, பயனாளர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி விபரங்கள் அல்லது பணத்தை அறிமுகமற்ற நபர்களுடன் தொலைபேசி ஊடாக பகிர வேண்டாம் எனவும் சபை வலியுறுத்தியுள்ளது.
Source: https://samugammedia.com/a-scam-gang-targeting-users-of-aswesum-dont-be-fooled-1784272011

