குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை கடந்த 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதியாகக் குறைந்துள்ளமை தொடர்பில் இன்று (11) பாராளுமன்றத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டார்.
அஸ்வெசும நிவாரணத்தை குறைக்குமாறு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையிலேயே பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், அஸ்வெசும வேலைத்திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், அது ஆரம்பிக்கப்பட்ட போதே சட்டத்தின் ஊடாக குறிப்பிட்ட கால இடைவெளியில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
அதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகளை இம்மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும திட்டம் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது 1,773,445 பயனாளிகள் இருந்ததாகவும், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 1,761,116 ஆகப் பதிவாகியிருந்ததாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், 2025ஆம் ஆண்டில் அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை 2,439,917 ஆக அதிகரித்திருந்த நிலையில், இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் அது 1,251,522 ஆகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயனாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அஸ்வெசும நன்மைகள் அதிவறிய, வறிய, பாதிப்படையக்கூடிய மற்றும் இடைக்காலம் என நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதில், இடைக்காலப் பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்திலும், பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்திலும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, தற்போது அதிவறிய மற்றும் வறிய ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரமே அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதேவேளை பயனாளிகளை உறுதிப்படுத்தும் மீளாய்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

