நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இன்றைய (03.12.2024) தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.
நேர ஒதுக்கீடு
இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது’ இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன். இதன்போது நான் கேட்டேன். இந்த நேர ஒதுக்கீடு எவ்வாறு இடம்பெறுகிறது என்று.
இன்றைய நாள் எனக்கு எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. நாளை எனக்கான நேரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்க சென்றேன்.
அங்கே அதிகாரிகள் இருந்தனர். மற்றைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். நாளை பிற்பகல் எனக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர்கள் எனக்கு கூறினார்கள்.
சபாநாயகரிடம் முறைப்பாடு
இந்த வரிசையை எப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் மற்றொரு நபரிடம் சென்று பேச சொன்னார்கள்.
அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றனர். அவர்கள் நினைந்தவாறு தீர்மானிக்க முடியாது. கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன்.
இதன்போது சுஜித் என்ற நபர் என்னை தாக்கினார். அவர் என் தந்தையின் வயதையுடையவர், இல்லையெனில் அவரை அந்த இடத்திலேயே தாக்கி நானே அவருக்கு சிபிஆர் செய்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கும் அதனால் நான் அவரை தாக்கவில்லை” என குறிப்பிட்டார்.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு இதன்போது அறிவுறுத்தப்பட்டது.