இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்று புதன்கிழமை இலங்கைக்கு வருகை தருகின்றார்.
கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு, உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள் குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது.
தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து அவர் விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளார்.
இந்தியாவின் ‘அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை’ கொள்கையின் அடிப்படையில், இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுடனான விக்ரம் மிஸ்ரியின் தனித்தனிச் சந்திப்புகள் அமைகின்றன.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதுடன், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த இந்தியத் தரப்பு கொழும்பு அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனத் தமிழ் தலைமைகள் வலியுறுத்தவுள்ளன.
மலையகத் தமிழ் சமூகத்தின் சொந்தக் காணி உரிமை, பாதுகாப்பான வீடமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்பதாக, தமிழ்பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி அநுரகுமாரவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தன. இது புதுடெல்லி மற்றும் கொழும்பு ஆகிய இரு தரப்புகளிடமும் தமது கோரிக்கைகளை வலுவாகக் கொண்டு சேர்க்கத் தமிழ் தரப்புகள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் ஜே.வி.பி. இந்தியத் திட்டங்களுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்திருந்த போதிலும், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அநுரகுமார தலைமையிலான அரசு புதுடில்லியுடன் சுமுகமான உறவையே பேணி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்திய விஜயம் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் வணிகத் திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. எனினும், சில திட்டங்களின் தாமதங்கள் குறித்து விக்ரம் மிஸ்ரி சிறப்பு அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னர் கைவிடப்பட்ட சம்பூர் திட்டம், தற்போது இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய நிறுவனத்துடன் இணைந்து 120 மெகாவாட் சூரிய மின்சக்தித் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 2027 இற்குள் நிறைவடைய வேண்டிய இந்தத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள், தற்போதைய அரசின் நிர்வாகத் தாமதங்கள் காரணமாகக் குறித்த காலத்தில் நிறைவடையவில்லை என்ற அதிருப்தி இந்தியத் தரப்பில் நிலவுகின்றது.
மின் உற்பத்தி இணைப்பு, எரிபொருள் குழாய் இணைப்பு மற்றும் கடல்வழி போக்குவரத்து போன்ற உத்திசார் இணைப்புத் திட்டங்களின் தாமதங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்தியாவின் 450 மில்லியன் டொலர் உதவித் திட்டத்தில் (350 மில்லியன் டொலர் கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் மானியம்), இலங்கை அரசு அதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. மேலும், 22 டீசல் எஞ்சின்களை மானியமாக வழங்க இந்தியா முன்வந்த போதிலும், அதற்குரிய கோரிக்கைப் பத்திரங்களை இலங்கை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் நிலவும் தடைகள் குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது
விக்ரம் மிஸ்ரியின் இந்த விஜயமானது வழக்கமான இராஜதந்திரச் சந்திப்பாக மட்டுமில்லாமல், பிராந்திய மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், தேங்கிக் கிடக்கும் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் ஒரு முக்கிய பரீட்சார்த்தக் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

