மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, கலேவெல, சிகிரியா உள்ளிட்ட பகுதிகளிலும், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் உள்ளூர் பெரிய வெங்காய அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளூர் பெரிய வெங்காயத்திற்கு சந்தையில் சிறந்த விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் அறுவடைக்கு போதிய விலை கிடைக்காததால், பெரும்பாலான விவசாயிகள் பெரிய வெங்காயச் சாகுபடியைக் கைவிட்டு மாற்றுப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இம்முறை பெரிய வெங்காய உற்பத்தி சுமார் 50 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இம்முறை வெங்காயச் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு ரூ.260 முதல் ரூ.280 வரை விலை கிடைத்து வருகிறது.
இந்த விலை உயர்வுக்கு அரசாங்கத்தின் வரி விதிப்போ அல்லது பிற நடவடிக்கைகளோ காரணம் அல்ல என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியா தனது வெங்காய ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்ததன் பின்னர் அங்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளமையே இலங்கை சந்தையிலும் விலை உயர்வதற்கான முக்கிய காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கலேவெல – பட்டிவெல பகுதியைச் சேர்ந்த பெரிய அளவிலான வெங்காய விவசாயியான எச்.ஏ. ரதனபால தெரிவிக்கையில், கடந்த போகங்களில் நியாயமான விலை கிடைக்காததுடன், தமது உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக இம்முறை பெரிய வெங்காயச் சாகுபடியின் அளவைக் குறைத்ததாகத் தெரிவித்த அவர், தம்மை நம்பியுள்ள 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு தொடர்ந்து சாகுபடியில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
இம்முறை 11 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் பயிரிட்டுள்ளதாகவும், சாதகமான காலநிலை காரணமாக ஒரு ஏக்கருக்கு 16,000 முதல் 18,000 கிலோ வரையான சிறந்த மகசூல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தம்புள்ளை பொருளாதார மையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு ரூ.260 வரை விலை கிடைத்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பெரிய வெங்காய அறுவடை, வெட்டுதல் மற்றும் பொதியிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் இக்காலகட்டத்தில் தொடர்ச்சியான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால், அவர்கள் திருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Source: https://samugammedia.com/price-of-local-big-onions-rises–farmers-happy-1788776125

