தம்புள்ளை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் தாய் மற்றும் மகள் என சந்தேகிக்கப்படும் இருவர் மிகவும் தந்திரமாக நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கமெரா காட்சிகளில், கடை ஊழியரின் கவனத்தைத் திசைதிருப்பிய பின்னர், நகைகள் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை இருவரும் லாவகமாகக் களவாடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கடை ஊழியர் வேறு பணியில் ஈடுபட்டிருந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேகநபர்கள், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து மிகத் திட்டமிட்ட முறையில் திருட்டை அரங்கேற்றியுள்ளதாகக் காணொளியில் தென்படுகிறது.
இக்காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

