பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்றவில்லையென்றால் இந்த நாடு அழிவுப் பாதைக்குள் செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளர்.
நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றும் போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் “தனக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான தீர்மானத்தினை பிரதான தமிழ் கட்சி எடுத்திருப்பதால் தமிழ் மக்களை தண்டிப்பதற்காக இருக்கின்ற மாகாண சபைகளை இயங்க விடாமல் செய்வதற்காக மிக மோசமான நடத்தையில் இன்று ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இறங்கியிருக்கின்றார்.
தமிழரசுக் கட்சி எடுத்த தீர்மானம்
அவருடைய இந்த நடத்தையே கடந்த முதலாம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியாக அவருக்கு ஆதரவளிப்பதில்லை என எடுத்த தீர்மானம் சரியானது என்று நிரூபணமாகின்றது.
பிரதான எதிர்க்கட்சித் தலைவருக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கின்ற போது அவருக்கும் இதனை ஒரு எச்சரிக்கையாக சொல்லுகின்றேன். எங்களோடு இணங்குகின்ற விடயங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு அழிவுப் பாதைக்குள் செல்லும்.
அவர் கொடுத்திருக்கின்ற வாக்குறுதிகளோடு சென்ற தடவையும் எங்களுடைய மக்கள் அவருக்கு பெரும்பாண்மையாக வாக்களித்திருந்தார்கள். ஆகையால் இந்த தடவையும் தமிழ் மக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு வாக்களிப்பார்கள்.
ஆனால் நாடு பூராகவும் வெளிப்படையாக அவர் சொல்லியிருக்கின்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றேன்.“ என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/-aMT6FuLOn8