நடப்பு அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக மக்களுக்குப் பாரிய பொய்களைக் கூறி ஏமாற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம் சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் மீண்டும் ஒருமுறை பேருந்து கட்டணங்களை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்கள் கடுமையான வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், கப்பலில் இருந்து இறக்கப்படும் விலையிலேயே மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்றும், அமைச்சர்களின் எரிபொருள் தரகுப் பணம் ஒழிக்கப்படும் என்றும், மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்படும் என்றும் பிரசாரம் செய்த போதிலும், இன்று எரிபொருள் விலை சுமார் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் எரிபொருள் விலையை மிகக் குறைந்த தொகையினால் அரசாங்கம் குறைத்திருந்த போதிலும், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது விலையை உயர்த்தும் அரசாங்கம், உலக சந்தையில் விலை குறையும் போது அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில்லை என அவர் சாடினார்.
உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது ஒரு விலை சூத்திரமும், விலை குறையும் போது மற்றொரு விலை சூத்திரமும் பயன்படுத்தப்படுவதாகவும், இந்த விலை சூத்திரங்கள் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சி அலுவலகத்தில் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளதாகவும், முறையான விலை சூத்திரம் பயன்படுத்தப்பட்டால் இவ்வாறு நடக்காது என்றும் அவர் கூறினார்.
மத்திய கிழக்கு யுத்தத்திற்கு முன்னர் ஒரு லீட்டர் ஓட்டோ டீசல் 281 ரூபாவாக இருந்ததுடன், யுத்தத்தைக் காரணம் காட்டி அது 382 ரூபா வரை உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், உலக நாடுகள் யுத்தம் முடிவடைந்ததும் டீசல் விலையைக் குறைத்த போதிலும் எமது அரசாங்கம் அதனைக் குறைக்கவில்லை என்றார். அதேபோல், 293 ரூபாவைக்கு விற்பனை செய்யப்பட்ட 92 ரக பெட்ரோல் தற்போது 414 ரூபாவாக உயர்ந்துள்ளதாகவும், மக்களுக்கு வாழ முடியாத ஒரு எரிபொருள் விலை சூத்திரத்தையே அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஒரு மாதத்திற்குள் மூன்று முறை எரிபொருள் விலையை உயர்த்திய அரசாங்கம், உலக சந்தையில் விலை வீழ்ச்சியடைந்த போது மூன்று முறை விலையைக் குறைக்க முன்வரவில்லை என்றும், இதன் மூலம் அரசாங்கம் அதிக லாபம் ஈட்டுவதுடன், தனியார் எரிபொருள் இறக்குமதி நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட லாபம் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெட்ரோல் 95 மற்றும் சுப்பர் டீசல் நுகர்வோருக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும், தற்போது நாட்டின் பணவீக்கம் 6.8 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அது ஏழை மக்களைப் பாரியளவில் பாதித்துள்ளதுடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, எரிபொருள் விலை குறைந்ததன் நன்மையை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க முறைகளின் கீழ் எரிபொருள் விநியோகிப்பது அவசியமற்றது என்றும், இந்த கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைச் சுருக்குவதால் இவற்றை அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் டெங்கு நோய் தற்போது ஒரு மரண அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பியுள்ளதாகத் தெரிவித்த ஹர்ஷன ராஜகருணா, டெங்குவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை என்றார். தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் டெங்கு ஒழிப்பிற்கான எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை என்றும், மத்திய அரசாங்கமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழிகாட்டல்களையோ அல்லது தரமான இயந்திர உபகரணங்களையோ வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
டெங்குவை ஒழிப்பதில் இந்த அரசாங்கத்திற்கு எந்தவொரு அனுபவமும் இல்லை எனச் சாடிய அவர், தொழிற்சங்கத் தலைவர்களே உள்ளூராட்சி மன்றங்களின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முறையான தீர்மானங்களை எடுப்பதற்கான அறிவு இல்லை என்றும், இதன் விளைவாக நாட்டின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேநேரம், விவசாயிகள் இன்று பலத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாகவும், விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் உரங்களை வழங்கவோ அல்லது நெல்லைக் கொள்வனவு செய்யவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
நெல்லுக்கான நிலையான விலையைத் தீர்மானிக்கக் கூட அரசாங்கத்தால் முடியவில்லை எனத் தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி விவசாயிகளை முற்றாக ஏமாற்றியுள்ளது என்றார். ‘விவசாயி உலகிற்கு ராஜா’ எனக் கூறி வாக்குகளைப் பெற்றவர்கள், இன்று விவசாயிகளைக் ‘கசிப்பு வியாபாரிகள்’ என அவமதித்து வருவதாகவும், விவசாயிகளின் தோள் மீது ஏறி ஆட்சிப் பீடமேறிய தேசிய மக்கள் சக்தி இன்று விவசாயிகளை மறந்துவிட்டதாகவும் அவர் சாடினார்.
எனவே, கடைசி ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு, நலிவடைந்துள்ள விவசாயிகளுக்குத் தேவையான நிவாரணங்களை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்தார்.

