எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பேரழிவிற்கு இழப்பீடாக பெறப்பட்ட பணம் எவ்வாறு
பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தெளிவான அறிக்கையை நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வள நிலைத்தன்மைக்கான துறைசார் மேற்பார்வை குழு கோரியுள்ளது.
அத்தோடு, கடற்றொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகள், கடலோர பாதுகாப்பு பணிகள்
மற்றும் இன்னும் எவ்வளவு பணம் மீதமுள்ளது என்பது குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையிலான இந்த குழுவின்
கூட்டத்தில், கடற்றொழில் துறையின் கீழ் ரூ.293 மில்லியன் இன்னும்
பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இழப்பீடு
இந்தத் தொகை இன்னும் கடற்றொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பது குறித்து
குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் நாடாளுமன்ற தகவல்கள் திணைக்களம்
வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில கடற்றொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்ததாலோ அல்லது இழப்பீடு கோர
விரும்புவோர் முன்னிலையாகாததால் சில நிதி அவ்வாறே உள்ளதாகவும் இந்தத் தொகைகள்
எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் விளக்கினர்.
நீதிமன்ற வழக்குகள்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பேரழிவு தொடர்பாக சிங்கப்பூர், இலங்கை மற்றும்
பிரித்தானியாவில் நடந்து வரும் நீதிமன்ற வழக்குகள் குறித்தும் குழு
விவாதித்தது.

அரசாங்க அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பின் அவசியத்தை உறுப்பினர்கள்
வலியுறுத்தியதுடன், முழு இழப்பீட்டுத் தொகையையும் வசூலிப்பதற்கு ஆதரவளிப்பதாக
சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வள நிலைத்தன்மைக்கான துறைசார் மேற்பார்வை
குழு உறுதியளித்தது.

