பிரபல பாதாள உலகத் தலைவரும், திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய புள்ளியுமான ‘கஞ்சிப்பான இம்ரான்’ இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சிப்பான இம்ரானை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சில அரசியல் பிரமுகர்கள் அபாயகரமான குற்றவாளிகளுடனும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருடனும் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் நாட்டில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு நிலவியது என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரதான குற்றவியல் வலைப்பின்னல்களின் தலைவர்களை இலக்கு வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதனால் பாதாள உலகக் குழுக்களிடையே அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
அபாயகரமான குற்றவாளிகளை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாரிய முயற்சிகள் தேவைப்படுவதாகவும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் நாட்டில் சட்டவாட்சியின் அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

