இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகுகளில் கடலுக்குச் சென்ற தீவக மீனவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், தொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இலங்கை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளையும், தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இரு நாடுகளின் அரசாங்கங்களும் இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வை ஏற்படுத்தி, இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீவக மீனவர்கள் வலியுறுத்தினர்.

