இலங்கையிலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இந்த விபரங்களை வெளியிட்டார்.
பல வருடங்களாக கிராம உத்தியோகத்தர்கள் கோரி வரும் பயணச் செலவுகளுக்கான போதிய எரிபொருள் கொடுப்பனவை வழங்குவது உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இன்று முதல் இந்த களப்பணி புறக்கணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் அல்லது உரிய அதிகாரிகள் முறையான தீர்வை வழங்கத் தவறும்பட்சத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுகவீன விடுமுறையைப் பதிவு செய்து நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிராம உத்தியோகத்தர்கள் தங்களது உத்தியோகபூர்வ கடமைகளைச் சரியாக மேற்கொள்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் இச்சந்திப்பில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

