காலாவதியான ஆய்வக இரசாயனப் பொருட்கள் விநியோகிக்கும் மோசடியின் பின்னணியில் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் சிலர் இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த காலப்பகுதியில் காலாவதியான அல்லது காலாவதியாகும் தருவாயில் இருந்த சுமார் 2500 மில்லியன் ரூபா பெறுமதியான இரசாயனப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை கணக்காய்வாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் மிகவும் மெத்தனப் போக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு காலாவதியான இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இரத்தப் பரிசோதனைகள் மூலம் சரியான மருத்துவ முடிவுகள் கிடைக்குமா என்பதில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது.
இதனால், குறிப்பிட்ட காலப்பகுதியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆய்வகங்கள் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து ஏற்றுக்கொள்ள முடியாதவொரு சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சோ அல்லது நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களோ தீவிரமான மந்தகதியை பின்பற்றுவதானது, இந்த மோசடிகளின் பின்னணியில் தற்போதைய சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளும் அங்கம் வகிக்கின்றனரா என்ற பலத்த சந்தேகத்தை தோற்றுவிப்பதாக விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டியுள்ளார்.

