கிண்ணியா கல்வி வலயத்தில் கல்விப் பொதுத் தராதர (உயர்தரம்) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 93.5% சித்தியைப் பெற்று, வலய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்த ரீ.பி.ஜாயா மகளிர் பாடசாலை மாணவிகளைக் கௌரவிக்கும் பாராட்டு விழா இன்று (23) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
மாணவிகள், பரிசில்கள் வழங்கி, பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை முகாமைத்துவக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நீகழ்வு, பாடசாலை அதிபர் எஸ். ரீ. நஜீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணமான அதிபர் எஸ். ரீ. நஜீமின் சிறந்த வழிகாட்டலைப் பாராட்டி, அவருக்கு அதிபர் ஆசிரியர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவம் அளிக்கப்பட்டது.
மேலும், மாணவிகளை இரவு பகலாக வழிநடத்தி, தங்களின் அயராத தியாகம் மற்றும் அர்ப்பணிப்பினால் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய ஆசிரியர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, மலர்மாலை சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இப்பரீட்சையில் இப்பாடசாலையிலிருந்து 31 மாணவிகள் தோற்றியிருந்த நிலையில், 30 மாணவிகள் பல்கலைக்கழக உயர்கல்விக்குத் தகுதி பெற்று, 93.5% என்ற வியக்கத்தக்க சித்தி விகிதத்துடன் கிண்ணியா கல்வி வலயத்திலேயே முதன்மை இடத்தைத் தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரீ.பி.ஜாயா மகளிர் பாடசாலையின் இந்த சாதனையைக் கொண்டாடும் வகையில் முழுச் சமூகமும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

