குடா கங்கை மற்றும் மகுர கங்கையைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
களு கங்கையின் குடா கங்கை உப-நதிப் படுகையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நதி நீர்மானிகளில் பதிவாகியுள்ள நீர்மட்ட நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் பிரகாரம், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் வெள்ளச் சமவெளியை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த ஆறுகளைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளினூடாகச் செல்லும் கிளை வீதிகள் நீரில் மூழ்கும் அபாயமும் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதிகளினூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

