உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, கொட்டகலை பிரதேச சபையினால் பார்வைக் குறைபாடு கொண்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சமூகநல நிகழ்வு நேற்று 17ஆம் திகதி கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில், பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குள் வசிக்கும், பார்வைக் குறைபாடு காரணமாக அன்றாட நடவடிக்கைகளில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் இதற்காக தெரிவுசெய்யப்பட்டனர்.
தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு முதலில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களின் பார்வைத் தேவைக்கு ஏற்ப மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
அதேவேளை, பரிசோதனையின்போது மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக கண்டறியப்பட்ட சிலருக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபையால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூகநல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தேவைகளை நேரடியாக அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை செயலாளர் ராஜவீரன், ஆளும் கட்சியின் உபதலைவி யாகுலமேரி உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Source: https://samugammedia.com/free-spectacles-for-100-visually-impaired-people-in-kotagala-1789713372

