பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நிஸ்ரின், பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான வை.வீ.எம். நபாஸ், ஹாதிக் இப்றாஹிம், எஸ்.எல்.ஏ. நிஸார் உட்பட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதம் மற்றும் உள்ளூராட்சி கீதம் என்பன இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் பிரதான நோக்கம் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பான அறிமுகவுரையும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி வாரத்தின் முதலாம் நாள் செயற்றிட்டமாகப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆதன வரி நிலுவைகளை அறவிடும் பணிகள் அதிகாரிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

