‘டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel And Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 உணவுக்கான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையில் முதலிடத்தை மெக்சிகோவும், இரண்டாம் இடத்தை இத்தாலியும், மூன்றாம் இடத்தை ஸ்பெயினும் பெற்றுள்ளதுடன், இலங்கை 50 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
உணவுக் கலாசார பாரம்பரியம், பிராந்திய உணவு வகைத்தன்மை, தெரு உணவு (Street Food) கலாசாரம், உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாடு, உயர்தர உணவுகள், நிலைத்தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் தனித்துவமான உணவு அனுபவங்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய ஐரோப்பா, ஆசிய-பசிபிக் பிராந்தியம், அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பிராந்தியங்களின் பல முன்னணி உணவு சுற்றுலாத் தலங்கள் இம்முறை ‘டாப் 50’ (Top 50) பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
நறுமணப் பொருட்கள், உள்ளூர் மூலப்பொருட்கள் மற்றும் பல்வேறு கலாசார உணவு மரபுகள் காரணமாக, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான உணவு அனுபவத்தை வழங்கும் நாடாக உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரு உணவுகள் முதல் கடலோர உணவகங்கள் வரை பல்வேறு வகையான உணவுகளை சுவைப்பதற்கான வாய்ப்புகள் இலங்கையில் காணப்படுவதாக டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் உணவுக்கு சிறந்த 10 இடங்களும் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இதன்படி கொழும்பு, காலி, கண்டி, நீர்கொழும்பு, எல்ல, யாழ்ப்பாணம், மிரிஸ்ஸ, நுவரெலியா, ஹிக்கடுவ மற்றும் திருகோணமலை ஆகியன உணவுக்கான சிறந்த இடங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.
கொழும்பு சோறு மற்றும் கறி வகைகள் (Rice and Curries), கொத்து ரொட்டி, ஆப்பம் மற்றும் புதிய கடல் உணவுகளுக்குப் பெயர் பெற்றுள்ளதுடன், காலி மற்றும் நீர்கொழும்பு ஆகியன கடல் உணவுகளை சுவைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடங்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கண்டி பாரம்பரிய இலங்கை உணவுகளுக்கும், யாழ்ப்பாணம் தனித்துவமான தமிழ் உணவுச் சுவைகளுக்கும் பெயர் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எல்ல உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்ட உணவுகளுக்கும், நுவரெலியா தேநீர் சார்ந்த உணவுகள் மற்றும் இனிப்பு வகைகளுக்கும், மிரிஸ்ஸ, ஹிக்கடுவ மற்றும் திருகோணமலை ஆகியன கடலோரப் பகுதி புதிய கடல் உணவுகளுக்கும் சிறந்து விளங்கும் உணவு சுற்றுலாத் தலங்களாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

